
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடப் போகும் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2018/19, 2020/21 ஆகிய 2 தொடர்களிலும் இந்தியா வெற்றி கண்டது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது.
அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை 3 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்திருந்தார். அதே போல இம்முறை இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெல்லும் என்று ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் கடந்த 2020/21 தொடரில் ஆஸ்திரேலியா 4 – 0 (4) என்ற கணக்கில் வெல்லும் என மைக்கேல் கிளார்க், மைக்கேல் வாகன் ஆகியோர் கணித்திருந்தனர். ஆனால் அதை பொய்யாக்கிய இந்தியா வரலாறு படைத்தது. அதே போல இம்முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெல்லும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் நம்பிக்கையாகும்.
முன்னதாக கடந்த 2020/21 தொடரில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இந்தியாவை 36க்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா வரலாற்றுத் தோல்வியை பரிசளித்தது. ஆனால் இம்முறை அதே போன்ற வெற்றியை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எளிதாக பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.
குறிப்பாக இரவு நேரத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் சிக்கினால் ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக என்று அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி ஹைடன் பேசியது பின்வருமாறு. “இம்முறை அடிலெய்ட் நகரில் நடைபெறும் 2வது போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. அப்போட்டியில் இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலைகளில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும்”
இதையும் படிங்க: சிறந்த வெர்ஷனை பாக்குறோம்.. அதை தாண்டி வந்த பும்ரா மாதிரி யாருமே இல்ல.. டிம் சௌதீ பாராட்டு
“அது போன்ற சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண் சாதகம் என்பது முற்றிலுமாக நீக்கப்படும். குறிப்பாக இரவு நேரத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய செசசனில் நீங்கள் தவறாக சிக்கினால் 130/4 என்ற வலுவான நிலையிலிருந்து 150/8 என்ற நிலைக்கு தள்ளப்படலாம். எனவே இயற்கையாக நீங்கள் அப்போட்டியில் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பே இல்லை” என்று கூறினார்.