இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். கடந்த 2016இல் அறிமுகமான அவர் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசினார். அப்போது இவரால் டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்ற பேச்சுக்கள் காணப்பட்டது. இருப்பினும் 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா 2019ஆம் ஆண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து பதிலடி கொடுத்தார்.
அந்த நிலையில் 2021ஆம் ஆண்டு காயத்தை சந்தித்த அவர் சுமார் ஒரு வருடமாக விளையாடவில்லை. அப்போது இந்த பவுலிங் ஆக்சனை வைத்துக்கொண்டு நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்ற கருத்துக்கள் காணப்பட்டன. அதை சமாளிக்க ஒன்று பும்ரா தனது பவுலிங் ஆக்சனை மாற்ற வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
காயத்தை தாண்டி:
இருப்பினும் தன் மீதான நம்பிக்கையை இழக்காத பும்ரா தொடர்ந்து அதே பவுலிங் ஆக்சனை வைத்து அபார கம்பேக் கொடுத்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை எடுத்து அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் அவரை வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.
இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த பின்பு பும்ரா இன்னும் மெருகேறியுள்ளதாக நட்சத்திர நியூஸிலாந்து வீரர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ராவை விட வேறு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சியட் 2024 விருது வழங்கும் விழாவில் சௌதீ பேசியது பின்வருமாறு.
சிறந்த வெர்ஷன்:
“முதலில் மிகப்பெரிய காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த பின் அவர் முன்பிருந்ததை விட தற்போது சிறப்பாக செயல்படுகிறார். அவரால் காயத்தை எளிதாக சமாளிக்க முடிந்ததாக தெரிகிறது. தற்போது அதிகமாக அனுபவங்களை பெற்றுள்ள அவர் தன்னுடைய ஆட்டத்தை நன்றாக புரிந்து கொண்டுள்ளார். தற்போது 3 வகையான கிரிக்கெட்டிலும் நாம் பும்ராவின் சிறந்த வெர்ஷனை பார்க்கிறோம்”
இதையும் படிங்க: அதுக்கு மேல செய்ய ஒன்னுமில்ல.. 2023 உலகக் கோப்பையில் தோற்க இது தான் காரணம்.. டிராவிட் பேட்டி
“அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் தற்சமயத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதில் அவரை விட சிறந்தவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 2024 நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் விளையாட பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



