CWC 2023 : அடுத்தடுத்து நொறுக்கப்பட்ட குட்டி மலிங்கா.. உ.கோ வரலாற்றில் பதிரனா மோசமான உலக சாதனை

Matheesa Pathirana
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் 2வது வெற்றியை ருசித்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 344/9 ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த அணியாக சாதனை படைத்தது.

அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 122, சமரவிக்ரமா 108 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹசான் அலி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 345 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம் 12, பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் அதிரடியாக விளையாடி சதமடித்து 113 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

நொறுக்கப்பட்ட குட்டி மலிங்கா:
அவருடன் சவுத் ஷாக்கில் 31, இப்திகார் அகமது 22*, நங்கூரமாக விளையாடிய முகமது ரிஸ்வான் சதமடித்து 131* ரன்கள் எடுத்ததால் 48.2 ஓவரில் 345/4 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேசிங் செய்த அணியாக உலக சாதனை படைத்தது. அந்தளவுக்கு ரன்களை வாரி வழங்கிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அப்படி பாகிஸ்தானிடம் அடி வாங்கிய இலங்கை பவுலர்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் மதீஸா பதிரனா உச்சகட்டமாக ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். குறிப்பாக 9 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் அதில் 1 விக்கெட் எடுத்தாலும் 90 ரன்களை 10 என்ற மோசமான எக்கனாமியில் ரன்களை வள்ளலாக வாரி வழங்கி இலங்கை சரித்திர தோல்வியை பதிவு செய்வதில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதை விட இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் 95 ரன்களை வாரி வழங்கினார். அந்த நிலையில் இந்த போட்டியில் கொஞ்சமும் முன்னேறாமல் 9 ஓவரில் 90 ரன்கள் கொடுத்த அவர் 48 வருட உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய முதல் 2 போட்டிகளில் 90 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை வழங்கிய பவுலர் என்ற மோசமான உலக சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs AFG : இந்தியாவும் எங்க வீடுங்க.. கோலியுடன் சண்டையில்ல.. ஆனா அவங்கள அடிக்க ரெடியா இருக்கோம்.. ஷாஹிதி பேட்டி

இலங்கை ஜாம்பவான் மலிங்கா போல ஸ்லிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் அவர் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினார். ஆனால் தோனி தலைமையில் சிறப்பாக விளையாடி குட்டி மலிங்கா என்ற பெயரை வாங்கிய அவர் சர்வதேச அளவில் அனுபவமற்ற காரணத்தால் இப்படி மோசமாக ரன்களை வாரி வழங்கி வருவது ரசிகர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement