வீடியோ : ஒரே ஓவரில் 24 ரன்கள், சவாலான பிட்ச்சில் மும்பையை நொறுக்கிய ஸ்டோனிஸ் – சச்சினின் சாதனையை உடைத்த பாண்டியா

LSG vs MI Stoinsis
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 63வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய இரு அணிகளும் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அந்த நிலைமையில் இந்த சீசனில் ஏனைய அனைத்து மைதானங்களும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வரும் நிலையில் லக்னோ மட்டும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதை அனைவரும் அறிவோம்.

அந்த சூழ்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே வித்தியாச முயற்சியாக தொடக்க வீரராக களமிறங்கிய தீபக் ஹூடா 5 (7) ரன்னில் தடுமாறி ஜேசன் பெரன்ஃடாப் ஓவரில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த பிரேரக் மன்கட் அடுத்த பத்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு மறுபுறம் தடுமாறிய குவிண்டன் டீ காக் 2 பவுண்டரியுடன் 16 (15) ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கியதால் 35/3 என ஆரம்பத்திலேயே லக்னோ தடுமாறியது. அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த கேப்டன் க்ருனால் பாண்டியா – மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் நிதானமாக செயல்பட்டு சரிவை சரி செய்ய போராடினர்.

- Advertisement -

அதில் ஒருபுறம் க்ருனால் பாண்டியா நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் சவாலான பிட்ச்சில் கூட தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக செயல்பட்ட ஸ்டோனிஸ் மும்பை பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்து லக்னோவை சரிவிலிருந்து காப்பாற்றினார். இருப்பினும் 42 பந்துகளை எதிர்கொண்டும் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 49* ரன்கள் எடுத்த க்ருனால் பாண்டியா கடைசி நேரத்தில் லேசான காயத்தை சந்தித்து மேற்கொண்டு விளையாடாமல் பாதியிலேயே வெளியேறினார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ரிட்டயர் ஹர்ட்டாகி செல்லும் போது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வித்தியாசமான சாதனையை தகர்த்த அவர் புதிய பெயரைப் பெற்றார். இதற்கு முன் கடந்த 2013 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஜாம்பவான் சச்சின் 38* (31) ரன்களில் காயத்தை சந்தித்து வெளியேறியதே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக நின்று அதிரடி காட்டிய ஸ்டோனிஸ் சிக்ஸருடன் அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு 8* (8) ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறினார். ஆனால் மறுபுறம் வேறு ஏதோ வித்தியாசமான பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவது போல் அட்டகாசமாக செயல்பட்ட ஸ்டோனிஸ் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் வீசிய 18வது ஓவரில் 6, 0, 4, 4, 6, 4 என 24 ரன்களை தெறிக்க விட்டு கடைசி 2 ஓவர்களிலும் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி கடைசி பத்திலும் சிக்சரை பறக்க விட்டு 4 பவுண்டரி 8 சிக்சருடன் 89* (47) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 177/3 இடங்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெரன்ஃடாப் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த போட்டியில் சவாலான பிட்ச்சில் கூட அபாரமாக பேட்டிங் செய்து லக்னோவுக்கு பெரிய ஸ்கோரை எடுத்த உதவிய ஸ்டோனிஸ் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார். அத்துடன் லக்னோ மைதானத்தில் இதற்கு முன் 160 ரன்களுக்கு மேல் எந்த அணியும் வெற்றிகரமாக சேசிங் செய்வதில்லை.

இதையும் படிங்க:லாவெண்டர் நிற சீருடையினை அணிந்து விளையாடியது ஏன்? குஜராத் அணியின் கேப்டன் – ஹார்டிக் பாண்டியா விளக்கம்

அந்த வகையில் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு மும்பையை தோற்கடிக்கும் முனைப்புடன் லக்னோ செயல்படுகிறது. ஆனாலும் சூரியகுமார் போன்ற முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களை கொண்ட மும்பை அதை துரத்தி வருகிறது.

Advertisement