
இந்திய கிரிக்கெட் அணி 2026 டி20 உலகக் கோப்பையை தங்களது சொந்த மண்ணில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதற்கு இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஃபார்முக்கு வருவது அவசியமாகிறது. 30 வயதில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி அசத்தினார்.
அதனாலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை அவர் விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளையும் வாங்கிய சூரியகுமார் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக பொறுப்பேற்றது முதல் அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து ஐசிசி வரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது.
குறிப்பாக அவரது தலைமையில் 2025 ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனைப் படைத்தது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பேட்டிங்கில் சூரியகுமார் பெரிய ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். குறிப்பாக 2024 டிசம்பர் மாதத்திற்கு பின் வெறும் 239 ரன்களை மட்டுமே குவித்துள்ள அவர் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
இந்நிலையில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் சிறப்பாக இந்திய அணியை வழி நடத்துவதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பாராட்டியுள்ளார். இருப்பினும் அதை தொடர வேண்டுமெனில் பேட்டிங்கில் சூரியகுமார் பெரிய ரன்கள் குவிப்பது முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு அவர் ஆரம்பத்திலேயே 360 டிகிரியில் அடிக்க முயற்சிக்காமல் செட்டிலாகி விளையாட முயற்சிக்க வேண்டும் என்று திவாரி அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி திவாரி பேசியது பின்வருமாறு. “ஃபார்ம் சூரியகுமாரின் கேப்டன்ஷிப் பொறுப்பை பாதிக்கும் என்று நான் கருதவில்லை. நமக்குத் தெரிந்த வரை அவருடைய கேப்டன்ஷிப் நன்றாக இருக்கிறது. நம் வீரர்களுடன் நன்றாக பேசும் அவர் அமைதியாக இருந்து முக்கிய முடிவுகளை எடுக்கிறார். இருப்பினும் உங்களுடைய பேட்டிங் முக்கியம். ஏனெனில் நீங்கள் பேட்டிங்கில் தடுமாறினால் அது உங்களுடைய அணியை தலைமைத் தாங்கி தேவையான ஊக்கமளிப்பதற்கான தன்னம்பிக்கையை பாதிக்கும்”
இதையும் படிங்க: கேப்டன் பதவியால் மட்டும் உங்களுடைய இடம் உறுதியாகாது.. சூரியகுமார் மற்றும் கில்லை – எச்சரித்த மனோஜ் திவாரி
“சூரியகுமார் இந்தியாவின் அதிகம் திறமையுடைய வீரர்களில் ஒருவர். இருப்பினும் தனது டெக்னிக், மனம், தன்னுடைய திட்டம் ஆகியவற்றில் எது தவறாக செல்கிறது என்பதை அவர் பார்க்க வேண்டும். நான் பார்த்த வரையில் அவர் ஆரம்பத்திலேயே அவசரமாக தேவையற்ற ஷாட்டுகளை அடிப்பதாக தெரிகிறது. எனவே ஒரு 10 பந்துகள் செட்டிலாகி முறையான ஷாட்டுகளை அடித்தால் பின்னர் அடித்து நொறுக்குவதற்கான திறமை அவரிடம் இருக்கிறது” என்று கூறினார்.