புதுசா இருக்கே ! களத்தில் சதமடித்த கையோடு குடும்பத்துக்கு கடிதம் எழுதிய இந்திய வீரர் – ரஞ்சி கோப்பையில் ருசிகரம்

Manoj Tiwari Letter
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் விருவிருப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் 2 பாகங்களாக நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் சமீபத்திய ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் மோதிய அந்த லீக் சுற்றில் தமிழகம் போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு ஆரம்பத்திலேயே வெளியேறினாலும் மும்பை, பெங்கால் உள்ளிட்ட 8 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து ஐபிஎல் 2022 தொடருக்கு பின் கடந்த ஜூன் 6-ஆம் தேதி துவங்கிய நாக்-அவுட் சுற்றில் முதல் பகுதியான காலிறுதியில் பெங்கால், மும்பை, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

அதை தொடர்ந்து பெங்களூருவில் ஜூன் 14இல் துவங்கிய அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தனது முதல் இன்னிங்சில் 341 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக ஹிமான்சு மன்ட்ரி சதமடித்து 165 ரன்களும் அக்ஷட் ரகுவன்ஷி 63 ரன்களும் எடுத்தனர். பெங்கால் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அசத்திய மனோஜ் திவாரி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்காலுக்கு அபிஷேக் இராமன், சுடிப் கராமி ஆகியோர் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். போதாக்குறைக்கு அடுத்துவந்த மஜூம்டர் 4, அபிஷேக் போரெல் 9, அபிமன்யு ஈஸ்வரன் 22 என எஞ்சிய முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 54/4 என ஆரம்பத்திலேயே திணறிய பெங்கால் படுமோசமான தொடக்கத்தை பெற்றது. அப்போது ஜோடி சேர்ந்த அந்த அணியின் நட்சத்திர மூத்த வீரர் மனோஜ் திவாரி மற்றொரு வீரர் சபாஷ் அகமதுடன் இணைந்து நிதானமாகவும் பொறுப்புடனும் பேட்டிங் செய்தார்.

6-வது விக்கெட்டுக்கு பொறுப்பான 183 ரன்கள் சேர்த்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் 12 பவுண்டரியுடன் சதமடித்த மனோஜ் திவாரி 102 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் சபாஸ் அஹமட் சதமடித்து 116 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெங்கால் வெறும் 273 ரன்களுக்கு சுருண்டது. அதை தொடர்ந்து 68 ரன்கள் முன்னிலை பெற்ற மத்தியபிரதேசம் தனது 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

புதுசா இருக்கே:
முன்னதாக இந்த தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் மனோஜ் திவாரி அம்மாநில தேர்தலில் வெற்றிபெற்று மாநில விளையாட்டுத் துறையின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் கிரிக்கெட் மீது உள்ள காதலால் தனது மாநில அணிக்கு ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் இந்த ரஞ்சி கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் ஏற்கனவே காலிறுதிப் போட்டியில் சதமடித்து தனது அணி அரையிறுதிக்கு முன்னேறியதில் முக்கிய பங்காற்றினார். அந்த நிலைமையில் அரை இறுதிப் போட்டியிலும் தனது அணி தடுமாறிய வேளையில் நங்கூரமாக நின்று சதமடித்து ஓரளவு காப்பாற்றிய அவர் அதை வித்தியாசமாக கொண்டாடினார். ஆம் பொதுவாக சதம் அடித்ததும் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டை கழற்றி பேட்டை உயர்த்தி கொண்டாடுவார்கள்.

அதை இப்போட்டியில் வழக்கம் போல செய்த அவர் சதம் அடித்ததும் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து காட்டினார். அதில் தனது மனைவி சுஸ்மிதா மற்றும் குழந்தைகள் அடங்கிய குடும்பத்தின் பெயர்களை குறிப்பிட்டு எழுதியிருந்த கடிதத்தை களத்திலேயே எடுத்துக்காட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் பெரிய அளவில் சாதிக்காக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்ட நிலையில் கிரிக்கெட் மீது இருக்கும் ஈர்ப்பால் மாநில அணிக்காக விளையாட விரும்பினார்.

இதையும் படிங்க : IND vs RSA : கோப்பையை வெல்ல தொடரை சமன் செய்யுமா இந்தியா, 3வது போட்டி நடக்கும் ராஜ்கோட் மைதானம் எப்படி, பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்காக போதிலும் அவரின் விருப்பத்திற்கு ஆதரவாக அவரின் குடும்பத்தினர் இருப்பதாலேயே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனோஜ் திவாரி இவ்வாறு வித்தியாசமாக தனது சதத்தை கொண்டாடினார். அவரின் இந்த வித்தியாசமான செய்கை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து எதற்காக அப்படி செய்தார் என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தை தூண்டியதால் அவரின் இந்த வித்தியாசமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement