ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக தக்க வைக்கப்படும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றி விடுமா பாண்டியாவை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை வருங்காலத்தை கொண்டு கடந்த வருடம் கழற்றி விட்ட மும்பை புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. அதற்கு அந்த அணி ரசிகர்களே உச்சகட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
தடுமாறிய மும்பை:
அதை விட பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களைப் போலவே மும்பை வீரர்களுக்கும் பிடிக்கவில்லை என்ற செய்திகள் வெளி வந்தன. அதற்கு ஆதாரமாக பாண்டியாவிடம் ஆலோசனைகளை கேட்காமல் ரோகித் சர்மாவிடம் பும்ரா ஐடியா கேட்ட வீடியோக்கள் வைரலாகின. அதே போல பயிற்சியாளர் லசித் மலிங்கா அமர்ந்திருந்த இருக்கையை பாண்டியா வலுக்கட்டாயமாக வாங்கிய வீடியோவும் வைரலானது.
அதனால் மும்பை அணிக்குள் பிரிவும் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் பொதுவாக மும்பை அணி தங்களுடைய வீரர்களை ஒரே குடும்பம் என்று சமூக வலைதளங்களில் தலைப்பிட்டு பதிவிடுவது வழக்கமாகும். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டு ஒற்றுமையின்மை உருவானது தோல்விக்கும் ஒரு காரணமாகவே அமைந்தது.
மீண்டும் ஜெயவர்தனே:
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து மார்க் பவுச்சருக்கு பதிலாக மகிளா ஜெயவர்தனே மீண்டும் தங்களுடைய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார் என்று மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 2017 – 2022 வரையிலான காலகட்டங்களில் அவர் மும்பை பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த காலகட்டங்களில் 3 கோப்பைகளை வென்று மும்பை மிகவும் முரட்டுத்தனமாக எதிரணிகளை அடித்து நொறுக்கியது.
இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை: 129 ரன்ஸ்.. 35/5 என புஜாரா அணியை மிரட்டும் தமிழ்நாடு.. கோவையில் காத்திருக்கும் ட்விஸ்ட்
அதனால் கடப்பாரை டீம் என்று மும்பையை எதிரணி ரசிகர்கள் பாராட்டுவது வழக்கம். அந்தளவுக்கு அணியை ஜெயவர்தனே ஒற்றுமையாக வழி நடத்தினர். அவரை தற்போது மீண்டும் பயிற்சியாளராக நியமித்துள்ளது மும்பை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் அவர் மும்பை அணியை ஒரே குடும்பமாக ஒன்றிணைப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.



