டெயில் எண்டராக வந்து நியூஸிலாந்துக்கு தொல்லை கொடுத்த தீக்சனா.. 20 வருட புதிய உலக சாதனை

Theekshana
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 8ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூஸிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாராக விளையாடி 172 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 51, தீக்சனா 38* ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 172 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 45, ரச்சின் ரவீந்த்ரா 42, டார்ல் மிட்சேல் 43 ரன்கள் எடுத்து 23.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்தியூஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

வித்தியாசமான உலக சாதனை:
மேலும் இந்த தோல்வியால் இலங்கை ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் 2023 உலக கோப்பையில் மோசமாக செயல்பட்டு பரிதாபமாக நாட்டுக்கு திரும்பியது. முன்னதாக இந்த போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் 128/9 என சரிந்த இலங்கை 150 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த சமயத்தில் 9வது இடத்தில் களமிறங்கியிருந்த சுழல் பந்து வீச்சாளரான மஹீஸ் தீக்சனா 11வதாக வந்த மதுசங்காவுடன் ஜோடி சேர்ந்து நியூசிலாந்துக்கு தொல்லை கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக மிகவும் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி 33வது ஓவரில் சேர்ந்து 47 ஓவர்கள் வரை நியூசிலாந்துக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுத்து 10வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கையை 171 ரன்கள் குவிக்க உதவியது.

- Advertisement -

அதில் மதுசங்கா 19 (48) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசிவரை அவுட்டாகாமல் நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்த மஹீஸ் தீக்சனா 3 பவுண்டரியுடன் 38* (91) ரன்கள் எடுத்தார். அந்த வகையில் 15.1 ஓவர்கள் அதாவது 91 பந்துகளை எதிர்கொண்ட அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற தனித்துவமான உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: என்னய்யா சொல்றிங்க.. செமி ஃபைனல் கனவில் விழுந்த இடியால்.. வீட்டுக்கு பெட்டி படுக்கையை கட்டும் பாகிஸ்தான்?

இதற்கு முன் 20 வருடங்களுக்கு முன்பாக 2003 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்டி பைக்கல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி 83 பந்துகளை எதிர்கொண்டு 64 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது இடத்தில் களமிறங்கி அதிக பந்துகளை எதிர்கொண்ட 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இதற்கு முன் 2005ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஜெய் பிரகாஷ் யாதவ் 92 பந்துகள் எதிர்கொண்டதே இந்திய சாதனையாகும்.

Advertisement