
ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பத்திலேயே அசத்திய இந்தியா கடைசி வரை தோற்காமல் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வகையில் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜூலை நான்காம் தேதி மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
குறிப்பாக கடற்கரை சாலையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து இந்தியர்களை அணிக்கு உற்சாக கொடுத்தனர். அவர்களுடன் திறந்தவெளி பேருந்தில் பயணித்து வெற்றியை கொண்டாடிய இந்திய அணியினருக்கு வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி 125 கோடி ரூபாய் பரிசு தொகையை இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்கியது.
ஸ்பெஷல் பரிசு:
இந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் அசத்திய தங்களுடைய மாநில வீரர்களை மகாராஷ்டிரா அரசு கௌரவித்துள்ளது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகிய 4 வீரர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுகின்றனர். அதன் காரணமாக இந்திய அணிக்காகவும் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர்கள் தற்போது 2024 டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினர்.
அவர்களுக்கு ஜூலை 5ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் அரசு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கே முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோர் தங்கள் மாநில வீரர்களை வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். அப்போது ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி பரிசாக வழங்கப்படுவதாகவும் மகாராஷ்டிர அரசு அறிவித்தது.
பின்னர் அந்த விழாவில் டேவிட் மில்லர் கேட்ச் பிடித்தது பற்றி சூரியகுமார் பேசினார். குறிப்பாக கேட்ச் தாம் பிடிக்கவில்லை பந்து தான் தம்முடைய கையில் விழுந்தது என்று சூரியகுமார் ஜாலியாக சிரித்துக்கொண்டே பேசினார். அதைத் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா நல்லவேளையாக “சூரியகுமார் கேட்சை பிடித்தார். இல்லையென்றால் நான் அவரை அணியிலிருந்து வெளியே உட்கார வைத்திருப்பேன்” என்று நகைச்சுவையாக பேசினார்.
இதையும் படிங்க: ஜிம்பாப்வே தொடரில் ஜாம்பவான்கள் ரோஹித், கோலி இடத்தில் விளையாடப் போவது யார்? கேப்டன் கில் பேட்டி
அதனால் முதலமைச்சர் உட்பட அங்கிருந்த அனைவரும் மொத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கைதட்டி பாராட்டினார். அந்த வகையில் உலகக்கோப்பை வெற்றியுடன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். அவருடன் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் விடை பெற்றது குறிப்பிடத்தக்கது.