- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அகர்கர் செலக்சன் அடிப்படையே தப்பு.. இந்தியாவின் தோல்விக்கு ஐபிஎல்லே காரணம்.. மதன் லால் விளாசல்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 25 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அந்தத் தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.

அது மட்டுமின்றி சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்த மாற்றங்கள் மற்றும் தவறான தேர்வுகளும் தோல்விக்கான விதையை விதைத்தது. இந்நிலையில் ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் விரர்களை டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுப்பதே வழக்கம் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அதை மறந்து விட்டு ஐபிஎல் தொடரை வைத்து வீரர்களை தேர்ந்தெடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தான் காரணம்:

அதே போல இந்திய பேட்ஸ்மேன்களும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான பொறுமையுடன் விளையாடவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். எனவே நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்விக்கு ஐபிஎல் தான் காரணம் என்று அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இது பற்றி 1983 உலகக்கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரரான மதன் லால் பேசியது பின்வருமாறு.

“சில நேரங்களில் இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்கள் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்து ஏன் தேர்வு செய்யப்படுகிறார்கள்? என்று நான் ஆச்சரியப்படுவேன். நீங்கள் ஐபிஎல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்தால் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவதற்கான தேவை என்ன? ரஞ்சிக் கோப்பை தான் நீண்ட நேரம் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களை கண்டறியும் இடமாகும்”

- Advertisement -

தவறான செலக்சன்:

“ஆனால் தற்போது அவர்கள் தங்களுடைய கண்ணை மூடிக்கொண்டு ஐபிஎல் தொடரை வைத்து வீரர்களை தேர்ந்தெடுப்பது போல் தெரிகிறது. உங்களுடைய டெஸ்ட் அணி தடுமாறினால் மொத்த அமைப்பும் சரிந்து விடும். நம்முடைய வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு அதிக ஆர்வத்துடன் இருப்பது போல் தெரிகிறது”

இதையும் படிங்க: முதல் ஒன்டே நடைபெறும் ராஞ்சி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“இனிமேலும் நமது வீரர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான தீவிர ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது ஐபிஎல் தொடரின் பாதிப்பு என்று சொல்வேன். ஏனெனில் நமது வீரர்கள் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கப் பார்க்கின்றனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் நீண்ட நேரம் விளையாடினால் மட்டுமே ரன்கள் அடிக்க முடியும். சில தவறுகள் செய்த பயிற்சியாளரை பதவி நீக்கம் செய்வது எளிது. ஆனால் அவரை மட்டும் குறையை சொல்வது நியாயமற்றது. ஏனெனில் வீரர்களும் தவறு செய்துள்ளனர்” என்று கூறினார்.

- Advertisement -