தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 0 – 2 என்ற கணக்கில் இந்தியா 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடரிலும் தங்களுடைய பலத்தைக் காண்பித்து இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்கா தயாராகியுள்ளது.
மறுபுறம் டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு குறைந்தபட்சம் ஒருநாள் தொடரில் வென்று தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும் தயாராகியுள்ளது. அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா இந்தியாவுக்கு விளையாட உள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. அதனால் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள அத்தொடர் நவம்பர் 30ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெற உள்ளது.
வரலாற்று புள்ளிவிவரம்:
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் 94 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா, 51 இந்தியா 40 வெற்றிகளைப் பெற்றுள்ளன. எஞ்சிய 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இரு அணிகளும் 32 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 18 வெற்றிகள், தென்னாப்பிரிக்கா 14 வெற்றிகளைப் பெற்றுள்ளன.
ராஞ்சி மைதானம்:
இத்தொடரின் முதல் போட்டி முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது. 2011இல் தோற்றுவிக்கப்பட்டு 50000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 2013 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கே வரலாற்றில் நடைபெற்ற 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 3 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2022இல் இங்கு கடைசியாக நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
வெதர் ரிப்போர்ட்:
ராஞ்சியில் நவம்பர் 30ஆம் தேதி மழை பெய்வதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாகவும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே மழையின் தடையின்றி இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
ராஞ்சி மைதானத்தின் பிட்ச் ஸ்லோவாக இருந்து வருவதால் நன்றாக பந்து வீசும் ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல சவாலைக் கொடுப்பார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க சவால்களை சமாளித்து நிதானத்துடன் விளையாடுவது அவசியமாகிறது.
இதையும் படிங்க: ராணா மாதிரி எல்லாத்தையும் கம்பீர் தான் முடிவெடுப்பாரு.. எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல.. மோர்கெல் வெளிப்படை
வரலாற்றில் இங்கு நடைபெற்ற 6 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 235. வரலாற்றில் இங்கு 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 3 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.



