
ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்ற 42-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் புனே நகரில் சந்தித்தன. அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய லக்னோவுக்கு தொடக்க வீரர் மற்றும் நல்ல பார்மில் இருக்கும் கேப்டன் கேஎல் ராகுல் 6 (11) ரன்களில் ரபாடா பந்தில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியாக ரன்களை குவித்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த காரணத்தால் 98/1 என நல்ல நிலைமைமை லக்னோ எட்டியபோது 4 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (37) ரன்கள் எடுத்து டீ காக் அவுட்டானார்.
அடுத்த ஓவரிலேயே 1 பவுண்டரி 2 சிக்சருடன் 34 (28) ரன்கள் எடுத்த தீபக் ஹூடா துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அதை பயன்படுத்திய பஞ்சாப் அதிரடி பவுலர் காகிஸோ ரபாடா அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 1 (4) ஆயுஷ் படோனி 4 (4) ஆகியோரை ஒரே ஓவரில் அடுத்தடுத்து அவுட் செய்து மிரட்டினார். அந்த இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 1 (4) ஜேசன் ஹோல்டர் 11 (8) போன்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர்.
சொதப்பிய லக்னோ:
அதனால் 98/1 என இருந்த அந்த அணி திடீரென 126/7 என்று சரிந்த நிலைமையில் கடைசி நேரத்தில் துஷ்மந்தா சமீரா 2 சிக்சர் உட்பட 17 (10) ரன்களும் மோசின் கான் 13* (6) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு மேல் எட்ட வேண்டிய லக்னோ 153/8 ரன்களை மட்டுமே போராடி எடுத்தது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும் ராகுல் சஹர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 154 என்ற இலக்கை துரத்திய பஞ்சாப்க்கு கேப்டன் மயங்க் அகர்வால் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 25 (17) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த ஷிகர் தவான் 5 (15) ரன்களில் போல்டானார்.
அந்த நிலைமையில் அதிரடி காட்ட வேண்டிய பனுக்கா ராஜபக்சாவும் 9 (7) ரன்களில் அவுட்டாகி சென்றதால் 58/3 என தடுமாறிய பஞ்சாப் சுமாரான தொடக்கத்தை பெற்றது. அப்போது பஞ்சாப்பை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர அதிரடி வீரர் லியம் லிவிங்ஸ்டன் 2 சிக்சர்களை பறக்கவிட்டாலும் 18 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 2 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதே நேரத்தில் மறுபுறம் அதிரடியாகவும் பொறுப்புடனும் பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ 5 பவுண்டரி உட்பட 32 (28) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததால் பஞ்சாப்பின் வெற்றி கேள்விக்குறியானது.
பஞ்சாப் பரிதாபம்:
அந்த சூழ்நிலையில் 105/6 என தவித்த பஞ்சாப்புக்கு கடைசி 4 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்ட போது ரிஷி தவான் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (22) ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 133/8 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் பரிதாபமாக தோற்றது. லக்னோ சார்பில் பந்துவீச்சில் அசத்திய இளம் வீரர் மோசின் கான் 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்தா சமீரா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த போட்டியில் பந்துவீச்சில் அசத்திய போதிலும் பேட்டிங்கில் வெறும் 154 ரன்களை எட்ட முடியாத பஞ்சாப் பரிதாபமாக தோற்றது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இதனால் பங்கேற்ற 9 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்து அந்த அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு 154 என்ற குறைவான ரன்களை லக்னோ நிர்ணயித்தபோது பஞ்சாப் தான் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் மயங்க் அகர்வால், ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் போன்ற அதிரடி பேட்ஸ்மேங்களை எந்த பவுலரை பிரயோகித்தால் மடக்க முடியும் என கணித்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் அதற்கேற்றார்போல் சமீரா, மோசின் கான் போன்ற பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் மாற்றிமாற்றி சரியாக பயன்படுத்தியதால் முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து அந்த அணி சிறப்பான வெற்றி பெற்றது.
குறிப்பாக க்ருனால் பாண்டியா 4 ஓவர்களை வீசி 1 மெய்டன் உட்பட வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து குறைவான ரன்களை கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றினார். மேலும் அந்த அணியைச் சேர்ந்த 4 முதன்மையான பவுலர்களுமே குறைந்தது 1 விக்கெட்டுகளை எடுத்ததால் இறுதியில் வெற்றி எளிதானது. இதன் காரணமாக முந்தைய போட்டிகளை விட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்துள்ள அந்த அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.