LSG vs SRH : சேப்பாக்கத்தை மிஞ்சும் அளவுக்கு சுழன்ற ஏக்னா பிட்ச், சொதப்பிய ஹைதராபாத் – சிறிய இலக்கை துரத்த திணறிய லக்னோ

LSG vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஹைதராபாத் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்ச் இருந்ததை கவனிக்க தவறிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே மயங் அகர்வாலை 8 (7) ரன்னில் அவுட்டாக்கிய க்ருனால் பாண்டியா மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த அன்மோல்ப்ரீத் சிங்கை 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (26) ரன்களில் எல்பிடபிள்யூ செய்தார்.

போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்கமும் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் மீண்டும் 3 (4) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் 55/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய ஹைதராபாத்தை மறுபுறம் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி காப்பாற்ற முயற்சித்த ராகுல் திரிபாதியும் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 34 (41) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

சேப்பாக்கத்தை மிஞ்சும் லக்னோ:
இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 16 (28) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அப்துல் சமத் 1 பவுண்டர் 2 சிக்சருடன் 21* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ஹைதராபாத் போராடி 121/8 ரன்கள் சேர்த்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளும் அமித் மித்ரா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 122 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 13 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்த தீபக் ஹூடா புவனேஸ்வர் குமாரிடம் 7 (8) ரன்களில் கேட்ச் கொடுத்து சென்றார்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரத்தை போட்ட கேப்டன் கேஎல் ராகுலுடன் அடுத்த களமிறங்கி ஜோடி சேர்ந்த க்ருனால் பாண்டியா 3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக 4 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (23) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அதனால் லக்னோவின் வெற்றி உறுதியானாலும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் மறுபுறம் தடவலாக செயல்பட்ட கேஎல் ராகுல் பினிஷிங் செய்ய முடியாமல் 4 பவுண்டரியுடன் 35 (41) ரன்களில் அடில் ரசித் சுழலில் அவுட்டாக அடுத்த பந்திலேயே ரொமாரியா செப்பார்ட் கோல்டன் டக் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் இறுதியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 10* (13) ரன்களும் நிக்கோலஸ் பூரான் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 11* (6) ரன்களும் எடுத்ததால் 16 ஓவரில் 127/5 ரன்கள் எடுத்த லக்னோ 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் கோட்டை விட்டு பந்து வீச்சில் போராடிய ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதிரடி சரவெடியான பவுண்டரி மற்றும் ரன் மழையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போட்டி ஏமாற்றமாகவே அமைந்தது.

குறிப்பாக வெறும் 122 ரன்களை துரத்துவதற்கு லக்னோ 16 ஓவர்கள் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. முன்னதாக சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானம் ஒரு காலத்தில் சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடிக்கும் அளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்த போதிலும் 2019 ஐபிஎல் காலகட்டங்களில் முழுக்க முழுக்க சுழல் பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்தும் அளவுக்கு பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது பொதுப்பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானம் இந்த சீசனில் ஓரளவு பேட்டிங்க்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: IPL 2023 : ரோஹித் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையை பதிவு செய்த – கொல்கத்தா வீரர்

இருப்பினும் இந்த பிட்ச்சில் கெய்ல் மேயர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் கூட தடவலாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அந்த வகையில் தற்போது சேப்பாக்கம் மைதானத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் இப்போட்டி நடைபெற்ற எக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானம் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement