LSG vs MI : கடைசி ஓவரில் மிரட்டிய லக்னோ பவுலர் – மிரட்டல் ஓப்பனிங் பெற்ற மும்பையை சாய்த்தது எப்படி? பிளே ஆஃப் சான்ஸ் யாருக்கு

LSG vs MI
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 63வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த இரு அணிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு தொடக்க வீரராக வந்த தீபக் ஹூடா 5 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பிரேயர் மன்கட் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

போதாகுறைக்கு மறுபுறம் தடுமாறிய குயின்டன் டீ காக் 16 (15) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்ததால் 35/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தனது அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் க்ருனால் பாண்டியா – மார்கஸ் ஸ்டோனிஸ் உடன் இணைந்து சரிவை சரி செய்ய போராடினார். அதில் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட பாண்டியா 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து 49* (42) ரன்கள் எடுத்த போது காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த நிக்கோலஸ் பூரானும் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் 8* (8) ரன்கள் எடுத்து தடுமாறிய போதிலும் மறுபுறம் வேறு எதோ பிட்ச்சில் விளையாடுவது போல் அட்டகாசமாக செயல்பட்ட மார்கஸ் ஸ்டோனிஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி 7 சிக்ஸரை விளாசி 89* (47) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் லக்னோ 177/3 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பேரன்ஃடாப் 2 விக்கெட்களை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 178 ரன்களை துரத்திய மும்பைக்கு பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி அட்டகாசமாக செயல்பட்ட ரோஹித் – இஷான் ஜோடி ஆரம்பத்திலேயே பவுண்டரிகளை பறக்க விட்டு 9.4 ஓவரில் அதிரடியாக 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தது. அதனால் ரசிகர்கள் அழைப்பது போல் கடப்பாரை பேட்டிங்கை கொண்ட மும்பை நிச்சயம் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலைமையில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் ஃபார்முக்கு திரும்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மாவை 37 (25) ரன்களில் அவுட்டாக்கிய ரவி பிஸ்னோய் தனது அடுத்த ஓவரிலேயே மறுபுறம் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 59* (39) ரன்கள் குவித்து அச்சுறுத்தலை கொடுத்த இசான் கிசானையும் காலி செய்து திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

அந்த நிலையில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட சூரியகுமார் யாதவ் தடுமாறி 7 (9) ரன்களில் க்ளீன் போல்ட்டான நிலையில் நேஹல் வதேராவும் 16 (20) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் கடைசி 3 ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட போது டிம் டேவிட் அதிரடியாக செயல்பட்ட நிலையில் விஷ்ணு வினோத் 2 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் மிரட்டிய டிம் டேவிட் நவீன்-உல்-ஹக் வீசிய 19வது ஓவரில் நோ-பால் உட்பட 6, 2, 5, 6 என 19 ரன்களை அடுத்ததால் வெற்றியின் நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அப்போது தன்னுடைய முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை கொடுத்த மோசின் கான் கடைசி ஓவரில் கேமரூன் கிரீன், டிம் டேவிட் என 2 முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டே 0, 1, 1, 0, 1, 2 என வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோவை 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். அதனால் டிம் டேவிட் 32* (19) ரன்கள் எடுத்தும் பினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய லக்னோ சார்பில் அதிகபட்சமாக யுவ்திர் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதையும் படிங்க:வீடியோ : ஒரே ஓவரில் 24 ரன்கள், சவாலான பிட்ச்சில் மும்பையை நொறுக்கிய ஸ்டோனிஸ் – சச்சினின் சாதனையை உடைத்த பாண்டியா

இந்த போட்டியில் 140 ரன்களை கூட துரத்த முடியாத பிட்ச்சில் ஸ்டோனிஸ் அதிரடியால் லக்னோ பெரிய ஸ்கோரை எடுத்ததும் கிறிஸ் ஜோர்டான் 19வது ஓவரில் 24 ரன்களை கொடுத்ததும் ஃபினிஷிங் செய்ய மும்பை தவறியதும் லக்னோவுக்கு வெற்றியை கொடுத்தது. அதனால் 13 போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்த லக்னோ 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. மறுபுறம் போராடி தோற்ற மும்பை கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement