ஹிட்மேன் ரோஹித், கிங் கோலியை பார்த்து பயமில்லை ! தைரியமாக பந்துவீச தயார் – தமிழக வீரர் உறுதி

Virat Kohli Rohit Sharma MI vs RCB
- Advertisement -

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை தொட்டுள்ளது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற ஏறக்குறைய அனைத்துப் போட்டிகளும் கடைசி ஓவர் வரை ரசிகர்களுக்கு திரில் விருந்து படைத்தது. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிப்பதற்காக நடைபெறும் 74 போட்டிகளில் 10 அணிகளும் கடும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் வாரத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை, மும்பை உள்ளிட்ட வெற்றிகரமான அணிகள் தோல்வி அடைந்து இந்த ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவக்கின.

IPL 2022 (2)

- Advertisement -

ராஜஸ்தானில் அஷ்வின்:
அதே சமயம் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற பெரிய பெயரை வாங்காத அணிகள் தங்களின் முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு இந்த வருடம் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக தொடங்கின. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக தோற்கடித்து வெற்றி பெற்றது.

ஆரம்ப காலகட்டங்களில் சென்னை அணியில் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடி தனது திறமையால் இந்திய அணியில் முக்கிய வீரராக உருவெடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் அதன்பின் பஞ்சாப் அணிக்கு ஒரு சில வருடங்கள் கேப்டனாக செயல்பட்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட தொடங்கியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் இதே ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லரை மன்கட் செய்ததால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் தற்போது ஜோஸ் பட்லர் இடம் வகிக்கும் அதே ராஜஸ்தானில் முதல் முறையாக அவருடன் சேர்ந்து சண்டை சச்சரவுகளின்றி அஷ்வின் விளையாட துவங்கியுள்ளது பல ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ravichandran Ashwin Jos Buttler Mankad

ரோஹித் – விராட் கோலிக்கு எதிராக தயார்:
இந்நிலையில் பட்லருடன் விளையாடுவதை விட இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஆவலுடன் காத்திருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோருக்கு எதிராக பந்துவீச விரும்புகிறேன். உலகத்தரம் வாய்ந்த 2 வீரர்களான அவர்கள் என்னுடன் இந்தியாவிற்காக விளையாடியுள்ளனர். எனவே சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களுக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் தொடர் வாயிலாக அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை விரும்புகிறேன். ஏனெனில் அவர்களும் இந்திய அணிக்காக விளையாடும் இந்திய பவுலர்களிடம் அவுட்டாக விரும்ப மாட்டார்கள். எனவே அவர்களுக்கு எதிராக இந்த வருடம் மட்டுமல்ல எல்லா வருடமும் பந்துவீச ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

இந்தியாவுக்காக கடந்த பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்து பல சதங்களை அடித்து வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நவீன கிரிக்கெட்டில் இந்தியா கண்டெடுத்த 2 மிகச்சிறந்த பேட்ஸ்மென்களாக பாராட்டப்பட்டு வருகின்றனர். உலகின் அனைத்து இடங்களிலும் கடினமான சூழ்நிலைகளிலும் தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவித்து இந்தியாவிற்கு வெற்றிகளை தேடிக் கொடுத்து வரும் இவர்கள் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படுகின்றனர். அதன் காரணமாகவே இவர்களுக்கு எதிராக பந்துவீசி இவர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு வெளிநாட்டு பவுலர்கள் விரும்புகின்றனர்.

ashwin

பொன்னான வாய்ப்பு:
அந்த வகையில் அவர்களைப் போலவே அவர்களுடன் இந்திய அணியில் கடந்த பல வருடங்களாக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பந்து வீச்சாளராக தனது அபார திறமையால் இந்தியாவிற்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் இந்திய அணியில் அவர்களுடன் விளையாடுவதால் அவர்களுக்கு எதிராக வலை பயிற்சியை தவிர மற்ற நேரங்களில் பந்துவீசும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

- Advertisement -

இருப்பினும் அவர்களைப் போன்ற உலகின் தரமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பதே ஒரு நல்ல தரமான பவுலருக்கு அழகு எனலாம். அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவிற்காக விளையாடும்போது அவர்களுக்கு எதிராக பந்துவீச கிடைக்காத பொன்னான வாய்ப்பை ஐபிஎல் தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனக்கூறிய ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் வரும் காலங்களிலும் அவர்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி தனது திறமையை வளர்த்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அவர் விளையாடும் போது ரசிகர்களும் ஹெல்மெட் போட்டுன்னுதான் வரனும் போல – அமித் மிஸ்ரா பூரிப்பு

மேலும் தங்களுடன் இந்திய அணிக்காக விளையாடும் ஒரு இந்திய பவுலருக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அவுட்டாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடும் சவாலாக இருக்கும் எனக் கூறிய அஷ்வின் அதைத்தான் தாமும் விரும்புவதாக தெரிவித்தார்.

Advertisement