அவர் விளையாடும் போது ரசிகர்களும் ஹெல்மெட் போட்டுன்னுதான் வரனும் போல – அமித் மிஸ்ரா பூரிப்பு

- Advertisement -

மும்பை நகரில் கடந்த வாரம் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 1-ஆம் தேதியன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

மிரட்டிய ராஜபக்சே, சொதப்பிய பஞ்சாப்:
அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை வீரர் பணுகா ராஜபக்சே முதல் பந்திலிருந்தே சரமாரியாக அடித்தார். வெறும் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் அதில் 3 பவுண்டரி மற்றும் 3 இமாலய சிக்சர்கள் உட்பட 31 ரன்களை 344.44 என்ற தெறிக்கவிடும் ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது 43/2 என ஓரளவு நல்ல நிலைமையில் இருந்த பஞ்சாப்க்கு அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் 16 ரன்களில் அவுட்டாக நட்சத்திர வீரர் லிவிங்ஸ்டன் 19 ரன்களிலும் ராஜ் பாவா 11 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க தமிழக வீரர் ஷாருக்கான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இதனால் 92/6 என தவித்த அந்த அணியை கடைசி நேரத்தில் ககிஸோ ரபாடா 16 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 25 ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் 137 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது. கொல்கத்தா சார்பில் அதிகபட்கமாக பந்துவீச்சில் மிரட்டிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தடுமாறிய கொல்கத்தா:
இதை தொடர்ந்து 138 என்ற எளிதான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் அஜிங்கிய ரஹானே 12 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 15 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க அடுத்த பேட்ஸ்மேனாக களமிறங்கிய நிதிஷ் ராணா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இப்படி ஆரம்பத்திலேயே பவர்ப்ளே ஓவர்களில் பஞ்சாப் அதிரடியாக பந்து வீசியதன் காரணமாக 7 ஓவர்களில் 51/4 என தடுமாறிய கொல்கத்தாவின் வெற்றி திடீரென கேள்விக்குறியானது.

- Advertisement -

அப்போது களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி மன்னன் ஆண்றே ரசல் இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் உடன் இணைந்து கொல்கத்தாவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு ஏற்றார்போல் ஆரம்பத்தில் துல்லியமாக பந்துவீசிய பஞ்சாப் வீரர்கள் அவரை கண்டதும் அரண்டு போய் சற்று நடுக்கம் நிறைந்த பந்துகளை வீசியதை அப்படியே பயன்படுத்திய ரசல் தனக்கே உரித்தான பாணியில் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இதில் ஒருபுறம் சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 24* ரன்கள் எடுத்து சப்போர்ட் கொடுக்க மறுபுறம் பட்டை கிளப்பிய ரசல் மைதானத்திலிருந்த ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார்.

முரட்டு அடி ரசல் இஸ் பேக்:
தொடர்ந்து மிரட்டிய அவர் வெறும் 31 பந்துகளில் அரைசதம் கடந்து 2 பவுண்டரி மற்றும் 8 இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு 70* ரன்களை 225.81 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் கொல்கத்தாவின் வெற்றியை தனி ஒருவனாக உறுதி செய்தார். ஒரு கட்டத்தில் தோல்வியின் பிடியில் சிக்கிய கொல்கத்தா அவரின் அதிரடியால் தப்பியதுடன் வெறும் 14.3 ஓவர்களில் 141/4 ரன்களை எடுத்து 33 பந்துகளை மீதம் வைத்து அதிரடியான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த வெற்றியின் வாயிலாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. முன்னதாக சமீப காலங்களாக அதிரடியாக தொடங்கிய போதிலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் தவித்து வந்த ஆண்ட்ரே ரசல் ஒரு வழியாக இந்த பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் விஸ்வரூபம் எடுத்து பழைய பார்முக்கு திரும்பியுள்ளது கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் எதிரணி ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நேற்றைய போட்டியில் அதிரடியாக 8 சிக்சர்களை பறக்க விட்ட அவரின் ஆட்டத்தை பார்த்து பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இனிமேல் ஆண்ட்ரே ரசல் விளையாடும் போது அவரின் ஆட்டத்தை காண மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் போட்டுக் கொண்டு வாங்க என்பது போல் முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா தனது சமூக வலைதளத்தில் அவரைப் பாராட்டினார்.

இதையும் படிங்க : எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பண்ணலாமா? இளம்வீரரை ஆதரித்து ஷ்ரேயாஸ் ஐயரை – திட்டும் ரசிகர்கள்

இத்துடன் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 95 ரன்களை குவித்து அதிக ரன்களை விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கியுள்ளார்.

Advertisement