தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 27ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற 19வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. சேலத்தில் இருக்கும் எஸ்சிஃஎப் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கோவைக்கு ஆரம்பத்திலேயே சுரேஷ்குமார் 4 (6) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் மற்றும் மற்றொரு தொடக்க வீரர் சுஜய் ஆகியோர் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் 11 ஓவர் வரை நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் சுஜய் 6 பவுண்டரியுடன் 44 (32) ரன்களும் நல்ல ஃபார்மில் இருக்கும் சாய் சுதர்சன் 6 பவுண்டரியுடன் 41 (28) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் முகிலேஷ் 5 ரன்களில் ரன் அவுட்டானாலும் அதீக் உர் ரஹ்மான் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (18) ரன்கள் எடுத்து அசத்தினார்.
கோவையின் மாஸ் வெற்றிநடை:
அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சாருக்கான் 11 (5) ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ராம் அரவிந்த் கடைசி வரை அவுட்டாகாமல் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 50* (22) ரன்களை விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் கோவை 199/8 ரன்கள் எடுக்க சேலம் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 200 என்ற கடினமான இலக்கை துரத்திய சேலத்திற்கு தரமணி கண்ணன் வேகத்தில் ஆரம்பத்திலேயே அமித் சாத்விக் டக் அவுட்டாக அடுத்து வந்த கௌஷிக் காந்தி 4 ரன்களில் சித்தார்த் வேகத்தில் அவுட்டானார்.
அதே போல மற்றொரு தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் 7 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மான் பாஃப்னா 10 (10), அபிஷேக் 15 (20) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதனால் இரு மடங்கு எகிறிய ரன் ரேட்டை கட்டுப்படுத்துவதற்காக சன்னி சந்து 29 (19) ஆகாஷ் சும்ரா 20 (15) முகமது அட்னன் கான் 20 (18) என லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து கோவையின் தரமான பந்து வீச்சில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 19 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சேலம் வெறும் 120 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டு 79 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த கோவை சார்பில் அதிகபட்சமாக தரமணி கண்ணன் 3 விக்கெட்டுகளும் கேப்டன் சாருக்கான் 2 விக்கெட்டுகளும் மணிமாறன் சித்தார்த், வள்ளியப்பன் யுவ்தீஸ்வரன், எம் முகமது, ஜடாவேத் சுப்பிரமணியம் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர்.
இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் அதிரடியாக 50* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ராம் அரவிந்த் ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி சேலத்தை அதன் சொந்த ஊரிலேயே பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு சாய்த்த நடப்பு சாம்பியன் கோவை இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் +2.138 என்ற வலுவான ரன்ரேட்டை பெற்றே புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க:உங்கள போய் அடுத்த சிஎஸ்கே கேப்டன்னு தப்பு கணக்கு போட்டமே, பென் ஸ்டோக்ஸ் மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன
அதன் காரணமாக அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் மற்றும் மற்றொரு நடப்பு சாம்பியன் ஆகிய அணிகளை விட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட 90% இப்போதே உறுதியாகியுள்ளது என்று சொல்லலாம். மறுபுறம் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 1 வெற்றியையும் 4 தோல்விகளையும் சந்தித்துள்ள சேலம் வெறும் 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தடுமாறுவதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாக பார்க்கப்படுகிறது.