TNPL 2023 : முடிஞ்சா தடுத்து பாருங்க, மதுரையின் வீரத்தை அடக்கிய கோவை – கட்டுக்கடங்காமல் பிளே ஆஃப் நோக்கி தொடரும் வெற்றி நடை

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 2ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு நடைபெற்ற 24வது லீக் போட்டியில் மதுரை பேன்தர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கோவைக்கு முதல் ஓவரிலேயே சுஜய் 4 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ்குமார் அதிரடியாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த சச்சின் நிதானத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் அடித்த இந்த ஜோடி 8.4 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 6 பவுண்ரி 4 சிக்ஸரை பறக்க விட்ட சுரேஷ்குமார் 64 (29) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த முகிலேஷ் 11 (7) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த கேப்டன் ஷாருக்கான் தமக்கே உரித்தான பாணியில் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

மிரட்டும் கோவை:
குறிப்பாக டெத் ஓவர்களில் மதுரை பவுலர்களை பந்தாடிய அவர் 6 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து 53 (23) ரன்களை 230.43 என்ற ஸ்ட்ரைன் ரேட்டில் வெளுத்து வாங்கி ஆட்டமிழந்தார். இறுதியில் மறுபுறம் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பி சச்சின் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 67 (52) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் திரும்பினார். அதனால் 20 ஓவர்களில் கோவை 208/5 ரன்கள் குவிக்க மதுரை சார்பில் அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 209 என்ற கடினமான இலக்கை துரத்திய மதுரைக்கு 3 பவுண்டரியை பறக்க விட்ட வாஷிங்டன் சுந்தர் 14 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஹரி நிஷாந்த் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்து தனது பங்கிற்கு விரைவாக ரன்களை குவித்த மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ்குமார் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41 (27) ரன்கள் குவித்த போது ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த ஜெகதீசன் கௌஷிக் 9 (7) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடியை காட்டிய கேப்டன் ஹரி நிஷாந்த் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ரன் ரேட் எகிறிய அழுத்தத்தில் அடுத்ததாக வந்த தீபன் லிங்கேஸ் 14 (10) ஸ்வப்னில் சிங் 10 (7) கிறிஸ் ஜெயின் 11 (6) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 18 ஓவர்களிலேயே மதுரையை 164 ரன்களுக்கு அவுட்டாக்கி 44 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த கோவை சார்பில் அதிகபட்சமாக மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளையும் கேப்டன் சாருக்கான் மற்றும் வள்ளியப்பன் யுவ்தீஸ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். முன்னதாக இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் கோவை ஏற்கனவே 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க:வீடியோ : ஆஸி’யிடம் தோனி மனசையும் நியாயத்தையும் எதிர்பாக்கலாமா? பரிதாபமாக அவுட்டான ஜானி பேர்ஸ்டோ

அந்த நிலையில் லீக் சுற்றில் பங்கேற்ற 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்த கோவை 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து முடிந்தால் எங்களை தடுத்து பாருங்கள் என்ற வலுவான செயல்பாடுகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. மறுபுறம் பங்கேற்ற 6 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்த மதுரை புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு சரிந்தது. அதனால் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement