ஆஸி’யிடம் தோனி மனசையும் நியாயத்தையும் எதிர்பாக்கலாமா? பரிதாபமாக அவுட்டான ஜானி பேர்ஸ்டோ

Johnny Bairstow
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கி விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த நிலைமையில் ஜூன் 28ஆம் தேதி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் மீண்டும் 325 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டூக்கெட் 98 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதன் பின் 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 371 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சர்ச்சை அவுட்:
அதனால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட் உடன் இணைந்து நங்கூரமாக நின்று சரிவை சரி செய்ய போராடினார். அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் டூக்கெட் மீண்டும் 83 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அந்த நிலைமையில் வந்த மற்றொரு நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோ தமது ஸ்டைலில் நிதானமாக விளையாட முயற்சித்தார்.

இருப்பினும் 52வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் பவுன்ஸ் ஆகி வந்ததால் குனிந்து அடிக்காமல் விட்டார். அதை தொடர்ந்து ஓவர் மாற்றுவதற்காக உடனடியாக வெள்ளை கோட்டை விட்டு அவர் வெளியே சென்ற போது மெதுவாக தமக்கு முன்பே ஒரு முறை பிட்ச்சாகி வந்த பந்தை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்ப்புகளை நோக்கி அடித்தார். அதனால் ஆஸ்திரேலிய அணியினர் அவுட் கேட்ட நிலையில் என்ன நடந்தது என்று சரியாக தெரியாமல் ஜானி பேர்ஸ்டோ குழப்பத்தில் வென்றார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 3வது நடுவர் சோதித்த போது பந்தை எதிர்கொண்டு அடிக்காமல் விட்ட பேர்ஸ்டோ ஏதோ ஒரு நினைப்பில் உடனடியாக வெள்ளை கோட்டை விட்டு வெளியேறினார். அதை பிடித்த கேரி சரியாக ஸ்டம்ப்களை அடித்ததால் 3வது நடுவர் அவுட் என்று அறிவித்தார். இங்கே விதிமுறை என்னவெனில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை பிடிக்கும் வரை ஜானி பேர்ஸ்டோ வெள்ளை கோட்டுக்குள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்க்காமல் உடனடியாக வெளியேறியதால் அந்த பந்து காலாவதியாகவில்லை.

அதை தெரிந்த அலெக்ஸ் கேரி விழிப்புணர்வுடன் செயல்பட்டு சரியாக அடித்து அவுட்டாக்கினார். அந்த வகையில் விதிமுறைப்படி அவுட் என்றாலும் நியாயப்படி ஆஸ்திரேலியாவின் மனசாட்சியற்ற தன்மையை காட்டியது என்றே சொல்லலாம். ஏனெனில் அடிக்காமல் விட்ட பேர்ஸ்டோ அந்த பந்தை எதிர்கொண்டு முடித்து விட்டேன் என்பதை காண்பிப்பதற்காக உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களும் செய்வது போல் தனது காலால் தரையில் குறியிட்டு தான் வெள்ளைக்கோட்டை தாண்டி சென்றார்.

இதையும் படிங்க:வீடியோ : “நான் ரெடி தான் வரவா”.. தளபதி விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடிய இந்திய வீரர் – அசத்தல் நடனம் இதோ

அது போன்ற சூழ்நிலைகளில் ஆஸ்திரேலியா நினைத்திருந்தால் இதே இங்கிலாந்தின் இயன் பெல்லை அவுட்டாக்கியும் இந்திய கேப்டன் தோனி திரும்ப அழைத்தது போல செய்து நியாயத்துடன் நடந்திருக்கலாம். அதை செய்யாமல் விதிமுறைக்குட்பட்டு நடந்தாலும் ஆஸ்திரேலியாவிடம் நியாயத்தை எதிர்பார்க்கலாமா என்று இங்கிலாந்து ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிலையில் மறுபுறம் கேப்டன் ஸ்டோக்ஸ் 108* ரன்கள் எடுத்துப் போராடுவதால் உணவு இடைவெளியில் 243/6 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 128 ரன்கள் தேவைப்படுகிறது.

Advertisement