TNPL 2023 : டாப்பர் அஸ்வின் அணியை சரவெடியாக அடித்து நொறுக்கிய சாய் சுதர்சன் – கோவை மாஸ் வெற்றி பெற்றது எப்படி?

- Advertisement -

தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் 2023 டிஎன்பிஎல் டி20 தொடரில் ஜூன் 25ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு சேலத்தில் இருக்கும் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதின. வலுவான 2 அணிகள் மோதியதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கோவைக்கு 5 ஓவரில் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் சுரேஷ் குமார் 6 பவுண்டரியுடன் 29 (17) ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் அதிரடியை துவக்கிய நிலையில் எதிர்புறம் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (17) ரன்களில் மற்றொரு தொடக்க வீரர் சுஜய் பெவிலியன் திரும்ப நிலையில் அடுத்ததாக வந்த ராம் அரவிந்த் 4 (2) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் திண்டுக்கல் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடியான பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு அரை சதமடித்தார்.

- Advertisement -

மாஸ் காட்டிய சுதர்சன்:
அவருடன் அடுத்ததாக களமிறங்கி நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய முகிலேஷ் 4வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 34 (33) ரன்களில் அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் கட்டுக்கடங்காமல் அடித்த சுதர்சன் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (41) ரன்கள் விளாசி கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

அவருடன் கேப்டன் ஷாருக்கான் கடைசி நேரத்தில் 2 பவுண்டரியுடன் 18* (11) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் கோவை 206/5 ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக சரவணகுமார் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 207 என்ற கடினமான இலக்கை துரத்திய திண்டுக்கல்லுக்கு ராகுல் ஆரம்பத்திலேயே 1 (3) ரன்னில் அவுட்டாகி செல்ல அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் பாபா இந்திரஜித்தும் தடுமாறி 1 (6) ரன்னில் பெவிலியன் திரும்பி பின்னடவை கொடுத்தார்.

- Advertisement -

போதாகுறைக்கு அடுத்து வந்த ஆதித்யா கணேஷ் டக் அவுட்டான நிலையில் அதிரடியாக விளையாட முயற்சித்த பூபதி குமாரும் 17 (9) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்ததால் 25/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய திண்டுக்கல் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சிவம் சிங் மறுபுறம் நிதானமாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த கேப்டன் அஸ்விணும் 5 (10) ரன்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அந்த இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய சரத்குமார் தன்னுடைய தரத்தை காட்டி கை கொடுத்ததை பயன்படுத்திய சிவம் சிங் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அரை சதம் கடந்தார். ஆனாலும் ரன் ரேட் அதிகரித்ததால் ஏற்பட்ட அழுத்தத்தில் 17வது ஓவர்கள் வரை நிலைத்து நின்று 6வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த அவரை 2 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (42) ரன்களில் அவுட்டாக்கிய கேப்டன் ஷாருக்கான் அடுத்த சில பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் சவாலை கொடுத்த சரத்குமாரையும் 36 (25) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 19.1 ஓவரிலேயே 147 ரன்களுக்கு திண்டுக்கல்லை சுருட்டி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறும் அளவுக்கு பந்து வீச்சிலும் மிரட்டிய கோவை சார்பில் அதிகபட்சமாக தரமணி கண்ணன் 3 விக்கெட்டுகளும் மணிமாறன் சித்தார்த் மற்றும் கேப்டன் சாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 83 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க:IND vs WI : இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அமைதியை உடைத்து பதிலடி கொடுத்துள்ள – புஜாரா

குறிப்பாக 2023 ஐபிஎல் ஃபைனலில் தோனி தலைமையிலான சென்னையை 96 ரன்கள் விளாசி திணறடித்த அவர் இந்த தொடரில் 86, 90, 64, 83 என 5 போட்டிகளில் 4 அரை சதங்கள் அடித்து மிரட்டி வருகிறார். மேலும் 5 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த கோவை புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் 4 போட்டிகளில் முதல் தோல்வியை சந்தித்த திண்டுக்கல் 3வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement