2023 ஆசிய கோப்பையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா – படைக்க வாய்ப்புள்ள 5 சாதனைகளின் பட்டியல், லிஸ்ட் இதோ

Rohit
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் துவங்கியது. இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் இத்தொடர் 50 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இம்முறை 8வது கோப்பையை வென்று தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்த தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அசத்துவது அவசியமாக பார்க்கப்படுகிறது. அதிலும் சமீப காலங்களாக தடுமாற்றமாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா உலக கோப்பைக்கு முன் முழுமையாக ஃபார்முக்கு திரும்ப இத்தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைமையில் களமிறங்க உள்ளார். அந்த சூழ்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரோகித் சர்மா தொடரில் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. அதிக ரன்கள்: இதுவரை 22 போட்டிகளில் 745 ரன்கள் அடித்துள்ள ரோகித் சர்மா இத்தொடரில் 227 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார். இதுவரை அந்த சாதனையை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 971 ரன்களுடன் இப்போதும் தன்வசம் வைத்துள்ளார்.

2. அதிக சாம்பியன் பட்டம்: இதுவரை முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் மட்டுமே 2 ஆசிய கோப்பைகளை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளனர். அதில் முகமது அசாருதீன் வென்ற 2 தொடர்களும் 50 ஓவர் போட்டிகள் என்ற நிலைமையில் தோனி வென்ற இரண்டில் 2016 தொடர் 20 போட்டிகளாக நடைபெற்றது. எனவே 2018இல் 50 ஓவர் ஆசிய கோப்பையை வென்ற ரோகித் சர்மா இம்முறையும் சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் அதிக 50 ஓவர் ஆசிய கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்வார்.

- Advertisement -

3. 30 சதங்கள்: இதுவரை 224 போட்டிகளில் 30 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா இத்தொடரில் இன்னும் 1 சதம் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (30 சதங்கள்) சாதனையை உடைத்து புதிய சாதனை படைப்பார்.

4. 10000 ரன்கள்: அதே போல 9837 ரன்களை எடுத்துள்ள ரோஹித் சர்மா இத்தொடரில் இன்னும் 163 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி, ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் அடிக்கும் 6வது இந்திய வீரர் என்ற சாதனை படைப்பார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் டீம் பத்தி மட்டுமே யோசிக்காதீங்க. அந்த டீமும் ரொம்ப டேஞ்சர் தான். ரோஹித் சர்மாவை எச்சரித்த – கவாஸ்கர்

5. அதிக போட்டிகள்: இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா இத்தொடரில் ஃபைனல் உட்பட 6 போட்டிகளிலும் விளையாடும் பட்சத்தில் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற இலங்கையின் மகிளா ஜெயவர்தனே (28 போட்டிகள்) ஆல் டைம் சாதனையை சமன் செய்வார்.

Advertisement