ஆசிய கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற அனைத்து நாட்டு வீரர்களின் பட்டியல்

Dhawan
- Advertisement -

ஆசிய கிரிக்கெட் சாம்பியணை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது. வரலாற்றில் இந்த தொடரில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக நடந்த 2018 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை 5 கோப்பைகளையும் பாகிஸ்தான் 2 கோப்பைகளையும் வென்றுள்ளது. கடந்த 1984 முதலில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒவ்வொரு வருடமும் கடினமான போட்டி நிலவும் நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு ஏதேனும் ஒரு வீரர் அந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் ஆசிய கண்டத்தில் நடைபெறும் இந்த தொடரில் தங்களைப் போலவே கால சூழ்நிலைகளை தெரிந்த திறமை வாய்ந்த எதிரணியை சமாளித்து தொடர் முழுவதும் சிறப்பாக செயல்படுவது கடினமான ஒன்றாகும். அந்த வகையில் ஆசிய கோப்பை வரலாற்றில் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு தங்களது நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து தொடர் நாயகன் விருதுகளை வென்ற நாயகர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சுரிந்தர் கண்ணா : 1984இல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஆசிய கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வென்று முதல் வருடத்திலேயே இந்தியா கோப்பையை வென்றது.

அந்த போட்டிகளில் முறையே 51*, 56 என மொத்தமாக 107 ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டதால் வரலாற்றின் முதல் ஆசிய கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. அர்ஜுனா ராணதுங்கா: தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 1986 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்து இலங்கை முதல் சாம்பியன் பட்டம் வென்றது.அந்த தொடரில் 1996 உலக கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இளம் வீரராக 105 ரன்கள் குவித்து இளம் வயதிலேயே முதல் ஆசிய வெல்ல முக்கிய பங்காற்றியதால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

3. நவ்ஜோட் சித்து: 1988இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அசத்திய திலிப் வெங்சர்க்கார் தலைமையிலான இந்தியா பைனலில் இலங்கையை தோற்கடித்து 2-வது கோப்பையை வென்றது.அந்த தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற இவர் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

- Advertisement -

4. நவ்ஜோட் சித்து: 1990/91இல் இந்திய மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையை முகமது அசாருதீன் தலைமையிலான இந்தியா வென்றபோது தொடர் நாயகன் விருது அறிவிக்கப்படவில்லை. அந்த நிலையில் 1995இல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் மீண்டும் அசாருதீன் தலைமையில் சாதித்த இந்திய அணியில் 197 ரன்களை எடுத்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு முக்கிய பங்காற்றிய இவர் மீண்டும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

5. அர்ஜுனா ரணதுங்கா: 1997இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் கேப்டனாக தனது அணியை வழிநடத்திய அர்ஜுனா ரணதுங்கா அதிகபட்சமாக 272 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

- Advertisement -

6. யூசுப் யுகானா: 2000ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தான் முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அந்தத் தொடர் முழுவதும் அசத்திய இவர் 295 ரன்கள் குவித்து பாகிஸ்தான் முதல் ஆசிய கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியதால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

7. சனாத் ஜெயசூரியா: 2004இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் 293 ரன்களையும் 4 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்திய இவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

8. அஜந்தா மெண்டிஸ்: 2008இல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து மீண்டும் இலங்கை 4வது கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய இலங்கையின் அஜந்தா மெண்டீஸ் 17 விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

9. ஷாஹித் அப்ரிடி: 2010இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா 5வது கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இருப்பினும் அந்த தொடரில் தோற்றாலும் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி 265 ரன்களையும் 3 விக்கெட்டுக்களையும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்தியதால் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

10. சாகிப் அல் ஹசன்: 2012இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டி வரை சென்று போராடிய வங்கதேசம் பாகிஸ்தானிடம் தோற்றது. அந்த தொடரில் 237 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து இறுதிப் போட்டி வரை தகுதி பெற முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகன் விருதை ஆறுதலாக வென்றார்.

11. லஹிரு திரிமன்னே: 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை 5வது கோப்பையை வென்று அசத்தியது. அந்த தொடரில் 279 ரன்கள் குவித்து பேட்டிங்கில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர் தொடர் நாயகன் விருதை வென்றார்.

12. சபீர் ரஹ்மான்: 2016இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு கடும் சவாலை கொடுத்த வங்கதேசம் இறுதிப்போட்டி வரை சென்று தோற்றது. அதற்கு 176 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய இவர் தோல்வியடைந்தாலும் ஆறுதல் பரிசாக தொடர் நாயகன் விருதை வென்றார்.

13. ஷிகர் தவான்: கடைசியாக கடந்த 2018இல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் மீண்டும் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 7வது கோப்பையை வென்றது. அந்த தொடரில் 342 ரன்களை வெளுத்து வாங்கிய இவர் தன்னை பெரிய தொடர்களின் நாயகன் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

Advertisement