தோனியின் மகளுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸி அனுப்பிய அன்பு பரிசு – இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சி

Ziva Dhoni Messi
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்தவர். அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2010இல் தரவரிசையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக தரம் உயர்த்திய அவர் வரலாற்றில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். மேலும் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்யும் விக்கெட் கீப்பராகவும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் பினிஷராகவும், ரோகித் சர்மா விராட் கோலி ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்த நல்ல கேப்டனாகவும் செயல்பட்ட அவர் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

அப்படி கிரிக்கெட்டில் நல்ல திறமையும் ஜாம்பவானாகவும் திகழும் அவர் எப்போதுமே உலகின் நம்பர் ஒன் விளையாட்டாக கருதப்படும் கால்பந்து மீது தனி ஆர்வம் கொண்டவர். சொல்லப்போனால் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பாக பள்ளி அளவில் அவர் கால்பந்து கிரிக்கெட்டில் கோல் கீப்பராக செயல்பட்டு தான் பின்னர் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக வளர்ந்தவர். அதனால் எப்போதும் உலக அரங்கில் நடைபெறும் கால்பந்து போட்டிகளின் மீது தனி கவனம் செலுத்தும் அவர் 2013 வாக்கில் சாதாரண ரசிகனைப் போல் ட்விட்டரில் கால்பந்து பற்றி பதிவிட்ட ட்வீட்கள் இப்போதும் பிரபலமாக உள்ளது.

- Advertisement -

மெஸியின் பரிசு:
அந்த நிலையில் கத்தாரில் சமீபத்தில் 2022 பிபா கால்பந்து உலகக் கோப்பை கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட ஏராளமான உலகின் கால்பந்து நட்சத்திரங்கள் தங்களது நாட்டுக்காக உலக கோப்பையை வெல்ல உயிரைக் கொடுத்துப் போராடி அந்த தொடர் ஒரு மாதமாக அனல் பறக்க நடைபெற்றது. இருப்பினும் அனைவராலும் கோப்பையை நெருங்க முடியாத அந்த தொடரில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மற்றொரு கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி கேப்டனாக தனது அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தி பைனலுக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா மோதிய மாபெரும் இறுதிப் போட்டி அனல் பறந்த நிலையில் கடைசி நேரத்தில் எம்பாப்வே மேஜிக் கோல்களால் 3 – 3 என சமனில் முடிந்தது. இருப்பினும் பெனால்டி ஷாட் முறையில் கடைசி நேரத்தில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. அதனால் ஏற்கனவே உலகின் சிறந்த கால்பந்து வீரராக கொண்டாடப்படும் மெஸ்ஸி உலக கோப்பை வென்ற கேப்டனாக சரித்திரம் படைத்தார். அவரது வெற்றியை இந்தியாவில் கொல்கத்தா மற்றும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் எல்லை கடந்து கொண்டாடியதையும் மறக்க முடியாது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவுக்காக கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனியின் மகளான சீவா தோனிக்கு கால்பந்து உலக கோப்பையை வென்ற லயோனல் மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை அன்பு பரிசாக அனுப்பி வைத்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சீவா “தந்தையைப் போலவே மகள்” என்ற தலைப்புடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அந்த ஜெர்ஸியில் “பரா சீவா அதாவது சீவாவுக்காக” என்று குறிப்பிட்டுள்ள மெஸி தனது ஆட்டோகிராப் போட்டுள்ளார். அதை அணிந்து கொண்ட தோனியின் மகள் 2 கன்னங்களிலும் கைகளை வைத்து மிகுந்த உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க2024 டி20 உலகக்கோப்பைக்கான டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ஹர்ஷா போக்ளே பதிவு

அதைப் பார்த்த ரசிகர்கள் அர்ஜென்டினாவுக்கு கால்பந்து உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இந்தியாவுக்கு கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற கேப்டனின் மகளுக்கு கொடுத்த பரிசை பார்த்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அப்படி கால்பந்து மீது அதீத பிரியம் கொண்ட தோனி இந்தியாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணியின் துணை உரிமையாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement