நெட்ஸ்ல கூட பேட்டிங் செய்யாத ராகுலுக்கு பதில் அந்த தமிழக வீரருக்கு 2023 உ.கோ சான்ஸ் கொடுங்க – சிவராமகிருஷ்ணன் கோரிக்கை

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் 48 போட்டிகளில் கோப்பைக்காக மோத வருகின்றன. அவர்களுக்கு பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா சவாலை கொடுத்து இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இருப்பினும் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தால் இத்தொடரில் பங்கேற்பார்களா என்பது 100% உறுதியாக தெரியாத நிலையில் மற்றொரு நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார். ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடி ஷிகர் தவானுக்கு பதில் 2019 முதல் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அணியின் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் சுயநலத்துடன் பெரிய ரன்களை எடுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

ராகுல் வேண்டாம்:
அதற்கேற்றார் போல் அடித்து நொறுக்கும் ஓப்பனிங் இடத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் எழுந்த உச்சகட்ட விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ துணை கேப்டன் பதவியைப் பறித்து மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை கொடுத்தது. அதில் சில தோற்க வேண்டிய போட்டிகளில் நங்கூரமாக விளையாடி சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் குணமடைந்ததும் அவருக்கு ஏற்கனவே உள்ளங்கையில் தாங்கி வரும் இந்திய அணி நிர்வாகம் 2023 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்ததும் பயிற்சிகளை செய்யாமல் உள்ளூர் போட்டியில் விளையாடாமல் நேரடியாக அதுவும் உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என ராகுலுக்கு முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட் போன்ற இடது கை பேட்ஸ்மேன்களாக ஒருவர் கூட இல்லாத குறையை சரி செய்வதற்கு தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட வேண்டுமென்ற அசாத்தியமான கோரிக்கையை அவர் வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “முதலில் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் பாதை யாருக்கும் அவ்வளவு எளிதாக இருந்து விடக்கூடாது. குறிப்பாக சர்வதேச அளவில் அதிகப்படியான போட்டி இருக்கும் என்பதால் நீங்கள் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து முழுமையாக தயாராக வேண்டும். அந்த நிலையில் அந்த இடத்தில் அனைவரும் சாய் சுதர்சன் போன்ற இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விளையாடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் 2011 உலகக்கோப்பையில் யுவராஜ், சுரேஷ் ரெய்னா போல சாய் சுதர்சன் பகுதி நேர பவுலராக இருப்பது சிறப்பாக இருக்கும் என்று ஒரு ரசிகர் அவருக்கு பதிலளித்தார். அதற்கு “அணியில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதற்கும் பவுலர்கள் விக்கெட்டுகள் எடுக்க தான் இருக்கின்றனர். பகுதி நேர பவுலர்கள் உங்களுடைய அணி தடுமாறினால் மட்டுமே உபயோகப்படுவார்கள்” என்று சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறுவது போல 2022 ஐபிஎல் தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட சுதர்சன் இந்த சீசனில் சென்னைக்கு எதிரான மாபெரும் ஃபைனல் உட்பட 362 ரன்களை 141.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

இதையும் படிங்க:அவர் ஒன்னும் சாதிக்கல, நாங்க தான் அவர லெஜெண்ட்டா மாத்துனோம் – 2011 உ.கோ வெற்றி பற்றி சேவாக் அதிரடி பேட்டி

அதே போல் 2023 டிஎன்பிஎல் தொடரிலும் 6 போட்டிகளில் 371* ரன்களை எடுத்து அசத்தி வரும் அவர் நல்ல ஃபார்மில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அஸ்வின் போன்ற தமிழக ஜாம்பவானுக்கே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வாய்ப்பு கிடைக்காத இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement