கிரிக்கெட் பற்றி தெரியாதவங்கல்லாம் பிசிசிஐ செயலாளர் – ஜெய் ஷா’வை கடுமையாக விமர்சித்த பாக் ஜாம்பவான்

Jay
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 91ஆவது வருடாந்திர கூட்டம் அக்டோபர் 18ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. அதில் 2019 முதல் தலைவராக செயல்பட்டு வந்த சௌரவ் கங்குலி பதவிக்காலம் முடிவடைந்து வெளியேறினார். அவருக்கு பதில் 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் வகித்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி 36வது தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2023ஆம் ஆண்டு முதல் முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை நடத்துவது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அதன் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வரும் 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று அதிரடியாக அறிவித்தார். அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஒரு காலத்தில் அனைத்து நேரங்களிலும் விளையாடி வந்த இந்தியா எல்லைப் பிரச்சனை காரணமாக கடந்த 2012க்குப்பின் சாதாரண இருதரப்பு தொடர்களில் மோதுவதை கூட மொத்தமாக நிறுத்தி விட்டது. மேலும் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் வேண்டா வெறுப்பாய் மோதி வருகின்றன.

- Advertisement -

விளையாட்டில் அரசியல்:
அத்துடன் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அங்கு தடை பெற்ற சர்வதேச போட்டிகள் அந்நாட்டு வாரியத்தின் கடும் போராட்டத்திற்குப் பின் சமீப காலங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2008க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக 2023 ஆசிய கோப்பையை தங்களது நாட்டில் நடத்தும் உரிமையை அந்நாட்டு வாரியம் வாங்கியிருந்தாலும் நாங்கள் அங்கே செல்ல முடியாது என்று இந்தியா தடாலடியாக அறிவித்துள்ளது. அத்துடன் அடுத்த வருட ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தத்தை கொடுப்போம் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் ஜெய் ஷா அதிரடியாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் விளையாட்டில் அரசியல் எதற்கு என அவரது இந்த கருத்துக்கு நிறைய விமர்சனங்கள் நேற்று முதலே காணப்படுகின்றன. ஏனெனில் ஒரு காலத்தில் களத்தில் பகமையாக நடந்து கொண்ட இருநாட்டு வீரர்கள் கூட இப்போதெல்லாம் நண்பர்களாக பழகுகின்றனர். எடுத்துக்காட்டாக வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்றும் இந்திய வீரர்கள் அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வாழ்த்து தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் தோனியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அத்துடன் சமீபத்திய ஆசிய கோப்பையின் போது மனிதநேய அடிப்படையில் காயமடைந்த சாஹீன் அப்ரிடியிடம் விராட் கோலி, ராகுல் போன்ற நட்சத்திரங்கள் நலம் விசாரித்தனர்.

- Advertisement -

அப்போது 2019க்குப்பின் சதமடிக்காததால் நிலவிய விமர்சனங்களுக்கு மத்தியில் விராட் கோலி விரைவில் சதமடிக்க வேண்டுமென கடவுளை பிரார்த்திப்பதாக சடாப் கான், சாகின் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் வீரர்கள் வெளிப்படையாக வாழ்த்தினர். மேலும் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு இந்திய சீனியர் பவுலர் முகமது சமி ஆலோசனை வழங்குவதும் கேப்டன் பாபர் அசாமுக்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததும் இரு நாடுக்கிடையே நிலவும் நல்ல நட்பை காட்டியது.

இப்படி நட்பு உருவாகி வரும் வேளையில் விரைவில் மெல்போர்ன் நகரில் டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதுவதற்கு முன்பாக இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன் என்று ஜெய் ஷா’வுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த கருத்து அவருடைய கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வாரியத்தை சிறந்த முறையில் வழி நடத்தும் அனுபவமின்மையை காட்டுவதாக விளாசும் அஃப்ரிடி இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ யின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ரோஜர் பின்னி யார்? – சுவாரசிய தகவல் இதோ

“கடந்த 12 மாதங்களில் இரு தரப்புக்கும் இடையே சிறந்த தோழமை ஏற்படுத்தப்பட்டு இரு நாடுகளுக்கிடையே நல்ல உணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பிசிசிஐ செயலாளர் ஏன் இந்த அறிக்கையை வெளியிடுகிறார்? இது இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாகத்தில் அனுபவம் இல்லாததை பிரதிபலிக்கிறது” என்று கூறினார். இதுபோக சயீத் அன்வர் போன்ற மேலும் சில முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் வாரிய நிர்வாகிகளும் இதற்கு அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement