அது மட்டும் நடக்காம போயிருந்தா.. 300 ரன்ஸ் அடிச்சு நியூஸிலாந்தை தோற்கடிச்சுருப்போம்.. இலங்கை கேப்டன் பேட்டி

Kusal Mendis 3
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக குசால் பெரேரா 51 மஹீஸ் தீக்சனா 38* ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 45, ரச்சின் ரவீந்திரா 42, டார்ல் மிட்சேல் 43 ரன்கள் எடுத்து 23.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

300 ரன்கள் அடித்திருப்போம்:
அதனால் அதிகபட்சமாக ஏஞ்சேலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியாத இலங்கை ஆறுதல் வெற்றி கூட பெறாமல் இத்தொடரிலிருந்து பரிதாபமாக நாடு திரும்ப உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் முதல் 10 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி கிடைத்ததாக இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடியிருந்தால் பேட்டிங்க்கு சாதகமான இந்த பிட்ச்சில் 300 ரன்கள் எடுத்திருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி 300+ ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தால் 5 விக்கெட்டுகளை எடுத்த தங்களுடைய பவுலர்கள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் எடுத்து நியூசிலாந்தை தோற்கடித்திருப்பார்கள் என்று வருத்தத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் 10 ஓவர்களிலேயே நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தோம். அது தான் எங்களுக்கு இவ்வளவு பெரிய சிரமத்தை ஏற்படுத்தியது. அதை சரியாக செய்திருந்தால் எளிதாக இந்த பிட்ச்சில் 300 ரன்கள் அடித்திருப்போம். பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் விக்கெட்டுகளை எடுப்பது கடினமாக இருந்தது. ஆனால் அதிலும் மதுசங்கா சிறப்பாக பந்து வீசினார். இருப்பினும் நாங்கள் குறைந்த இலக்கை மட்டுமே நிர்ணயித்தோம்”

இதையும் படிங்க: இலங்கையை வீழ்த்திய நியூஸிலாந்து.. பாகிஸ்தான் ஃசெமி பைனல் செல்ல தேவையான பரிதாப ரன்கள் என்ன

“இத்தொடரில் எனக்கு கிடைத்த கேப்டன்ஷிப் பதவியை மகிழ்ச்சியாக செய்தேன். ஆனால் என்னுடைய சொந்த செயல்பாடுகளில் ஏமாற்றத்தை சந்தித்தேன். மொத்தத்தில் இத்தொடரில் மகிழ்ச்சியாக விளையாடினேன். எங்களுடைய சில வீரர்கள் இத்தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக இந்தியாவிடம் 55 ரன்களுக்கு சுருண்டு படு தோல்வியை சந்தித்ததால் இலங்கை வாரியமே மொத்தமாக கலைக்கப்பட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement