அப்படி சொன்னது தப்பு தான்.. இலங்கை கேப்டன் மெண்டிஸ் வருத்தனமான பேட்டி.. நடந்தது என்ன?

Kusal Mendis
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இலங்கைக்கு மிகவும் மோசமாக அமைந்தது. 1996 உலகக் கோப்பையை வென்று ஒரு கட்டத்தில் சங்ககாரா, முரளிதரன் போன்ற ஜாம்பவான்களால் மிரட்டி வந்த இலங்கை அவர்களின் ஓய்வுக்கு பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறிய போதிலும் 2022 ஆசிய கோப்பையை வென்றது தொடர்ச்சியாக அமைந்தது.

இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த அந்த அணி 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் சொந்த மண்ணில் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான வரலாற்றை படைத்தது. அந்த சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பையிலும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளிடம் தோற்ற இலங்கை ஆரம்பத்திலேயே செமி ஃபைனல் வாய்ப்பை நழுவ விட்டது.

- Advertisement -

இலங்கை கேப்டன் வருத்தம்:
அப்படி அடுத்தடுத்த மோசமான தோல்விகளை சந்தித்ததால் ஏமாற்றமடைந்த இலங்கை அரசு தங்கள் நாட்டு வாரியத்தை கலைப்பதாக அறிவித்தது. மறுபுறம் விதிமுறையை மீறி அரசு தலையிட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இலங்கைக்கு தடை விதிப்பதாக ஐசிசி கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. மேலும் 2023 உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்த அந்த அணி 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த வகையில் தற்போது அனைத்து வகைகளிலும் அதள பாதாளத்தில் இலங்கை திண்டாடுவது அந்நாட்டு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதற்காக அனைவரும் வாழ்த்திய நிலையில் நீங்கள் வாழ்த்து சொல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு நான் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டுமென இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் கூலாக சொன்னது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. குறிப்பாக செய்தியாளர்கள் சம்பந்தமின்றி கேட்ட கேள்விக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும் அந்த சமயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளாத அவரை ரசிகர்கள் விமர்சித்தனர்.

இதையும் படிங்க: என்னா மனசுய்யா.. நாடு திரும்பும் முன்.. தீபாவளி நள்ளிரவில் ஆப்கானிஸ்தான் வீரர் செய்த நெஞ்சை தொடும் நிகழ்வு

இந்நிலையில் அன்று அவ்வாறு தாம் பெருந்தன்மையின்றி சொன்னது தவறு தான் என்று குசால் மெண்டிஸ் வருத்தத்துடன் ஏசியன் மிரர் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு. “செய்தியாளர்கள் சந்திப்பின் போது நான் 49வது சதத்தை விராட் கோலி அடித்தார் என்பதை அறியாமல் இருந்தேன். அந்த சமயத்தில் செய்தியாளர் திடீரென என்னிடம் கேட்டதால் அந்த கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாத நான் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினேன். நீங்கள் 49 சதங்கள் அடிப்பது சுலபமல்ல. எனவே அன்றைய நாளில் நான் சொன்னது தவறு. அதற்காக வருந்துகிறேன்” என்று கூறினார்.

Advertisement