
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 5வது போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது.
அதன் காரணமாக இந்திய அணி குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் கடந்தப் போட்டிகளில் இந்தியா 20 விக்கெட்டுகளை எடுப்பதற்கு தடுமாறி தோல்விகளை சந்தித்தது. மேலும் அதிரடியாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்டுள்ள இங்கிலாந்து அவருக்கு எதிராக தடுமாறும் என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது.
எனவே 20 விக்கெட்டுகளை எடுப்பதற்கான அக்கறை இருந்தால் கெளதம் கம்பீர் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அஸ்வின், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அப்படிப்பட்ட நிலையில் துவங்கிய கடைசிப் போட்டியிலும் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 5வது நாளில் விக்கெட்டுகளை எடுப்பதற்கு தரமான ஸ்பின்னர் தேவை என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அதற்காகவும் அஸ்வின், ஜடேஜா இடத்தை நிரப்புவதற்காக வருங்காலத்தைக் கருத்தில் கொண்டும் குல்தீப்பை இந்திய அணி தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும் என்றும் கங்குலி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச்சில் புற்கள் இருப்பதால் இங்கிலாந்து 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறது என்று நினைக்கிறேன். அது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் நினைக்கிறேன்”
“கடந்த காலங்களில் இந்திய அணிகள் ஜடேஜா, அஸ்வின் போன்ற தரமான ஸ்பின்னர்கள் இருந்தார்கள். லார்ட்ஸ், மான்செஸ்டர் மட்டுமின்றி பர்மிங்காம் போட்டியிலும் குல்தீப் விளையாடியிருப்பதை நான் விரும்புகிறேன். தரமான ஸ்பின் இல்லாமல் 5வது நாளில் ஒரு அணி வெற்றிகரமாக பவுலிங் செய்வது கடினம். எடுத்துக்காட்டாக கடந்தப் போட்டியின் 5வது நாளில் இந்தியா பேட்டிங் செய்ததை நாம் பார்த்தோம்”
இதையும் படிங்க: கே.எல் ராகுலை டிரேடிங் முறையில் வாங்கி பதவியையும் வழங்க காத்திருக்கும் கே.கே.ஆர் – விவரம் இதோ
“அன்று இங்கிலாந்து அணியில் தரமான ஸ்பின்னர் இல்லாததாலேயே விக்கெட் எடுக்க முடியவில்லை. கடந்த காலங்களில் ஷேன் வார்னே, முரளிதரன், இங்கிலாந்தின் ஸ்வான், பனேசர், நமது இந்தியாவில் ஹர்பஜன், கும்ப்ளே என அனைத்து அணிகளிலும் சிறப்பான ஸ்பின்னர்கள் இருந்தார்கள். எனவே குல்தீப்பை இந்தியா தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். அவர் வருங்காலத்திற்கு முக்கியமானவர்” என்று கூறினார். அத்துடன் அன்சுல் கம்போஜை ஒரு போட்டியுடன் மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்த கங்குலி பெங்காலின் முகேஷ் குமாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.