
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அத்தொடரில் பாதுகாப்பு பிரச்சனையால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்டது.
அதே தொடரில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா தொடரிலிருந்து நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியதும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் 10 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச் சென்றது.
அதற்கு முன்பாகவே 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. அது போக சமீபத்திய டெஸ்ட் தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதிப் பெறாமல் இந்தியா வெளியேறியது.
இந்த அனைத்து தோல்விகளுக்கும் சாம்பியன்ஸ் டிராபி செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது இந்திய ரசிகர்களை கொஞ்சம் ஆறுதலடைய வைத்தது. இந்நிலையில் எப்போதுமே ஐசிசி தொடரில் ஆஸ்திரேலியாவை ஃபைனலில் எதிர்கொள்வதை விட செமி ஃபைனலில் எதிர்கொள்வதையே இந்தியா விரும்புவதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்வியால் பிசிசிஐ கடுப்பாகி 10 புதிய விதிமுறைகளை அறிவித்தது.
அதனால் வெளிநாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் தங்களது குடும்பத்தைப் பார்ப்பதில் சிக்கலை சந்தித்துள்ளார்கள். அதற்கும் ஆஸ்திரேலியா தான் காரணம் என்று தெரிவிக்கும் குல்தீப் இது பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை நாங்கள் அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்ள விரும்புகிறோம். அவர்களை நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பவில்லை”
இதையும் படிங்க: 43 வயதானலும் சிங்கம் சிங்கமே.. மின்னல் வேகத்தில் மிரட்டிய தல தோனி.. ஆர்சிபி 196 ரன்ஸ்.. கோலி மோசமான சாதனை
“ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் எதிர்கொள்வதை விட இறுதிப் போட்டியில் எதிர்கொள்வது வித்தியாசமான அழுத்தத்தைக் கொடுக்கும். ஆஸ்திரேலியாவில் நாங்கள் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தோம். அதனால் ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக பிசிசிஐ ஸ்ட்ரிக்ட்டாக மாறியது. நீங்கள் ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படித் தான் இந்தியாவில் அனைத்து வேலை செய்யும்” என்று கூறினார்.