
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தெனாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடும் இந்தியா 2வது நாள் முடிவில் 9/0 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மட்டுமே மீதமிருப்பதால் இப்போட்டியில் இந்தியா வெல்லுமா என்ற கேள்வி காணப்படுகிறது. ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால் கொல்கத்தாவில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 1 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று இந்தியாவுக்கு தோல்வியைப் பரிசளிக்கும்.
அதனால் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் கலக்கத்துடனேயே இருக்கிறார்கள். இந்நிலையில் கொல்கத்தாவை காட்டிலும் கௌகாத்தி பிட்ச் தார் ரோட் போல பவுலர்களுக்கு மிகவும் சவாலாக இருப்பதாக இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதைப் பற்றி புகார் செய்யாமல் சவாலை எதிர்கொள்வதாக தெரிவிக்கும் அவர் இந்திய அணி 5 செஷன்களில் முழுமையாக பேட்டிங் செய்து இப்போட்டியில் கம்பேக் கொடுத்து வெல்லும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா பிட்ச் வித்தியாசமானது. இது பிளாட்டான ரோட் போல இருக்கிறது. ஒரு பவுலராக நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செய்ய விரும்புவீர்கள். ஆனால் பேட்டிங் செய்வதற்கு நல்ல பிட்ச் கிடைக்கும் போது நீங்கள் கம்பேக் கொடுப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். நேற்று முழுமையான கட்டுப்பாட்டுடன் பந்து வீசிய எங்களை இன்று ஒரு செசன், ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் பின் தள்ளியுள்ளது”
“இருப்பினும் ஒவ்வொருவரும் நல்ல முயற்சியைப் போட்டுள்ளனர். பிட்ச்சில் பவுலர்களுக்கு பெரிதாக உதவியில்லை. ஆனால் அதுவே டெஸ்ட் போட்டியாகும். நீங்கள் அங்கே மகிழ்ச்சியுடன் கற்றுக்கொண்டு விளையாட வேண்டும். நீங்கள் அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் விளையாடி உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தப் போட்டியின் பிட்ச் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கலாம். எனவே எந்தப் புகாரும் இல்லை”
இதையும் படிங்க: காயமா? ஓய்வா? தெ.ஆ ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா இடம் பெறாதது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்
“தற்சமயத்தில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய அணியின் மனநிலையாகும். நாளை முதல் 5 – 6 ஓவர்கள் முக்கியம். நாங்கள் ஒவ்வொரு செசனாக எடுத்து விளையாடுவோம். 4 அல்லது 5வது நாளைப் பற்றி அதிகமாக சிந்திக்க மாட்டோம். ஒருவேளை எங்களால் 5 செஷன்கள் பேட்டிங் செய்ய முடிந்தால் நாங்கள் நல்ல நிலைமையில் இருப்போம்” என்று கூறினார்.