
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற ஒன்பதாவது ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் நேற்று வெளியான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான சுப்மன் கில் முதலிடத்தையும், ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தையும், விராட் கோலி ஐந்தாவது இடத்தையும், ஷ்ரேயாஸ் ஐயர் எட்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.
இப்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியை சேர்ந்த 4 வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் நேற்று ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியானது.
அந்த வகையில் வெளியான அந்த பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா தொடர்ச்சியாக முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் 6 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த டாப் 10-ல் எத்தனை இந்திய வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டு வீரர்கள் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளனர்.
அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா பத்தாவது இடத்தையும், சாம்பியன் டிராபி தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தினை பிடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : எந்த 11 பேரை அனுப்பியிருந்தாலும் இந்தியாவை அங்கு வீழ்த்த முடியாது – ஷாஹித் அப்ரிடி புகழாரம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ரச்சின் ரவிந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை ஆரம்பத்திலேயே வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட குல்தீப் யாதவ் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.