இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 12-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது அவர்களது முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 421 ரன்களை குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து 271 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 130 ரன்களில் இந்திய அணியிடம் சரணடைந்தது.
அதன் காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் கூறுகையில் : இந்த போட்டியை நேரில் காண வந்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். போட்டியின் முதல் நாள் எங்களை ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நிறைய இருந்தது. இருந்தாலும் நாங்கள் எங்களது மோசமான பேட்டிங்கால் அவர்களை வருத்தமடைய செய்து விட்டோம்.
இந்த மைதானத்தில் பந்து நினைத்த அளவு சுழலவில்லை. இந்த போட்டியில் நான் ரன்களை எடுக்காதது மிகவும் ஏமாற்றத்தை தந்தது. ஒரு அணியின் கேப்டனாக நானே முன்னின்று பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வழிநடத்தி இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கில் நானே தவறு செய்து விட்டேன்.
முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். அந்த நிலையில் அணியின் தலைவராகவும், சீனியர் வீரராகவும் நான் நின்று விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எதுவுமே எங்கள் வழியில் செல்லவில்லை. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம். ஏனெனில் அவர்கள் அந்த அளவிற்கு களவியூகத்தை சரியாக பயன்படுத்தி பந்து வீசுகின்றனர். அவர்களுக்கு எதிராக நாம் நினைத்த ஷாட்டை விளையாட முடியவில்லை.
இதையும் படிங்க : IND vs WI : என்மீது நம்பிக்கை வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. ஆட்டநாயகன் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி
அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்ய சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த போட்டியில் அறிமுகமாகிய அதனேசி மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளார். பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என இந்த முதல் போட்டியிலேயே தெரிந்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் நிறைய பங்களிப்பினை இனி வழங்குவார் என நினைப்பதாக பிராத்வெயிட் குறிப்பிடத்தக்கது.