IPL 2023 : இனிமேல் அவர் வாயில் பேசமாட்டார், அவரின் பேட் தான் பேசும் – நட்சத்திர இந்திய வீரரின் விமர்சனங்களுக்கு ஆண்டி ப்ளவர் பதிலடி

Andy Flower
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் கோப்பையை வெல்ல களமிறங்கும் 10 அணிகளில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் தங்களது முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. கடந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி நட்சத்திர இந்திய வீரர் கேஎல் ராகுல் தலைமையில் லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டாலும் பிளே ஆஃப் சுற்றில் பெங்களூருவிடம் தோற்று வெளியேறியது. எனவே கடந்த சீசனில் நழுவ விட்ட கோப்பையை இம்முறை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்கும் அந்த அணிக்கு டீ காக், தீபக் ஹூடா போன்ற நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் கேப்டனாக ராகுல் அதிரடியாக விளையாட வேண்டியது அவசியமாகிறது.

Rahul

- Advertisement -

சொல்லப்போனால் 659, 593, 670, 626, 616 என 2018 – 2022 வரை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை 17 கோடி என்ற உச்சத்துக்கு உயர்த்திய அவரால் பஞ்சாப் அணிக்கும் சரி லக்னோ அணிக்கும் சரி கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. காரணம் பெரிய ரன்களை எடுத்தாலும் அதை 2019 முதல் முறையே 135.38, 129.34, 138.80, 135.38 என குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுப்பது அவருக்கு உதவுகிறதே தவிர அவருடைய அணிக்கு உதவுவதில்லை.

பேட் பேசும்:
அதனால் ஆரஞ்சு தொப்பிக்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டுமென்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ராகுல் விளையாடுவதாக சமீப காலங்களில் ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்து வருகிறார்கள். அந்த நிலையில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். குறிப்பாக 2022 ஐபிஎல் தொடருக்குப்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஃபார்மை இழந்து கடந்த ஒரு வருடமாக மோசமாக செயல்பட்டு வருவதால் இந்திய அணியிலும் நிலையான இடத்தை இழந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

எனவே அடுத்து நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட இந்திய அணியில் மேற்கொண்டு நிலையான வாய்ப்புகளை பிடிக்க வேண்டுமெனில் அதற்கு அவர் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு இந்த சீசனில் பெரிய ரன்களை குவித்து கேஎல் ராகுல் தன்னுடைய பேட்டால் பதிலடி கொடுப்பார் என்று லக்னோ அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஜிம்பாப்வே ஜாம்பவான் வீரர் ஆண்டி பிளவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகத்தை கொடுப்பவர். கடந்த சீசனில் அவர் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தன்னுடைய அணியை லீக் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றி பெற வைத்து எலிமினேட்டர் போட்டிக்கு முன்பு வரை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். அவருக்கும் எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது. எனவே இந்த சீசனிலும் அவர் கேப்டனாக முன்னின்று மிகச் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய பேட்டால் பேசுவார் என்று உறுதியாக நம்புகிறேன்”

Andy-Flower

“நாங்கள் இந்த சீசனில் வெற்றி பெறுவதற்காக வந்திருக்கிறோம். அது தான் எங்களுடைய எளிமையான திட்டமாகும். குறிப்பாக டெல்லிக்கு எதிரான எங்களுடைய முதல் போட்டியில் எங்களுடைய சொந்த மைதானத்தில் வெற்றியுடன் இத்தொடரை துவக்க விரும்புகிறோம். கடந்த சீசனில் இதே அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அதே வெற்றி நடையை இந்த சீசனிலும் நாங்கள் தொடர விரும்புகிறோம்”

இதையும் படிங்க:BAN vs IRE : கடைசி போட்டியில் அட்டகாசம் செய்த அயர்லாந்து, வங்கதேசத்துக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்றி 2 சாதனை

“டெல்லியும் வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாங்கள் எங்கள் பலத்திற்கேற்றார் போல் விளையாட உள்ளோம். குறிப்பாக எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களும் சிறந்தவர்களாக இருக்கின்றனர். மேலும் பேட்ஸ்மேன்கள் எந்த சவாலையும் சமாளிப்பவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement