BAN vs IRE : கடைசி போட்டியில் அட்டகாசம் செய்த அயர்லாந்து, வங்கதேசத்துக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்றி 2 சாதனை

BAN vs IRe
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த அயர்லாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்த வங்கதேசம் ஒய்ட் வாஷ் வெற்றி பெறும் முனைப்புடன் மார்ச் 31ஆம் தேதியன்று சிட்டகாங் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் இம்முறை அட்டகாசமாக பந்து வீசிய அயர்லாந்துக்கு ஈடு கொடுக்க முடியாத அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.2 ஓவரிலேயே வெறும் 124 ரன்களுக்கு சுருண்டது.

லிட்டன் தாஸ் 5, ரோனி தாலுக்தார் 14, நஜ்முல் சாண்டோ 4, கேப்டன் சாகிப் அல் ஹசன் 6, ஹ்ரிடாய் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 5 பவுண்டரி 2 சிக்சருடன் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து 51 (42) ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்தய வீச்சில் அமர்க்களமாக செயல்பட்ட அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 125 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் அதிரடியாக பேட்டிங் செய்து விரைவாக ரன்களை குவித்தார்.

- Advertisement -

இரட்டை வரலாற்று சாதனை:
இருப்பினும் எதிர்ப்புறம் ராஸ் அடைர் 7, டுக்கர் 4 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிந்தனர். ஆனாலும் மறுபுறம் ஏற்கனவே தொடரை இழந்து விட்டதால் ஆனது ஆகட்டும் என்ற எண்ணத்துடன் சரவெடியாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 77 (41) ரன்களை விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் ஹேரி டெக்டர் 14* (18) ரன்களும் குர்ட்டிஸ் கேம்பர் 16* (9) ரன்களும் எடுத்ததால் 14 ஓவரிலேயே 126/3 ரன்களை எடுத்த அயர்லாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் வென்ற வங்கதேசம் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்றது. ஆனாலும் ஒய்ட் வாஷ் செய்ய விடாமல் ஆறுதல் வெற்றி பெற்ற அயர்லாந்து சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 9 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த அயர்லாந்து அந்த மோசமான வரலாற்றை இந்த போட்டியில் உடைத்து முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அதே போல இப்போட்டியில் 36 பந்துகள் மீதம் வைத்து வென்ற அந்த அணி டி20 கிரிக்கெட்டில் முழு அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு எதிராக அதிக பந்துகளை மீதம் வைத்து பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2022 டி20 உலக கோப்பையில் ஹோபர்ட் நகரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 15 பந்துகள் மீதம் வைத்து வென்றதே முந்தைய சாதனையாகும்.

அப்படி இரட்டை சாதனைகளை படைத்து திருப்தியுடன் இந்த தொடரை நிறைவு செய்த அயர்லாந்துக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் டால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்தத் தொடரை வங்கதேசம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய தஸ்கின் அகமது தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க:IPL 2023 : இந்த ஐ.பி.எல் தொடரின் ஸ்ட்ராங்கான டீம் இதுதான் – ரிக்கி பாண்டிங் வெளிப்படை

இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஏப்ரல் 4 முதல் தாக்காவில் நடைபெறுகிறது. அதன் பின் வரும் மே மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் 9ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement