
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் 2019 காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதே காரணத்தால் இந்திய அணியில் ஷிகர் தவானை பின்னுக்குத் தள்ளிய அவர் துவக்க வீரராகவும் துணை கேப்டனாகவும் முன்னேறினார். ஆனால் 2022க்குப்பின் அதிரடியாக விளையாடத் தடுமாறிய அவரை தேர்வுக் குழுவினர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டு வருகின்றது.
அதனால் தற்சமயத்தில் 3 வகையான இந்திய அணியிலும் நிலையான இடம் இல்லாமல் கே.எல் ராகுல் தடுமாறி வருகிறார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதாவது பிரபல பாலிவுட் தொலைக்காட்சியில் காபி வித் கரன் ஜோகர் எனும் நிகழ்ச்சியில் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா பதிலளித்தனர். அதனால் நிறைய ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். அதே போல ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் அவர்களை கடுமையாக விமர்சித்தார்கள்.
அதனால் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். இருப்பினும் எதிர்ப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பிசிசிஐ அதிரடியான தடை விதித்தது. அவர்களுக்கு பதிலாக தமிழகத்தின் விஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் தாயகம் திரும்பிய அவர்கள் மீண்டும் சில மாதங்கள் தடைகளை கடந்து ஐபிஎல் தொடரில் விளையாடி 2019 உலகக் கோப்பையிலும் தேர்வாகி விளையாடினார்கள்.
இந்நிலையில் அந்த பேட்டிக்கு பின் தாம் முழுவதுமாக மாறிவிட்டதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன். அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது”
இதையும் படிங்க: 82 ரன்ஸ்.. மேத்தியூஸ் மொத்த அனுபவத்தை இறக்கியும் தடுமாறும் இலங்கை சாதிக்குமா? இங்கிலாந்து வெல்லுமா?
“அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நான் அணியிலிருந்து தடை செய்யப்பட்டேன். உண்மையில் நான் பள்ளியில் கூட தடை பெற்றதில்லை. தண்டனை பெற்றதில்லை. அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது கூட எனக்கு தெரியவில்லை. பள்ளியில் கூட எனது பெற்றோர்கள் வந்து பதில் சொல்லும் அளவுக்கு எப்போதும் நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை” என்று கூறினார்.