சொந்த ஊரில் சரவெடி தீபாவளி கொண்டாடிய ராகுல்.. 32வது நாளில் ரோஹித் சாதனையை உடைத்து புதிய மாஸ் சாதனை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பெங்களூரு நகரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே வெளியேறிய நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 410/4 ரன்கள் குவித்து தங்களுடைய 2வது அதிகபட்ச உலகக் கோப்பை ஸ்கோரை பதிவு செய்தது.

இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 61, சுப்மன் கில் 51 ரன்கள் அடித்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த விராட் கோலி தம்முடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் எடுத்தார். ஆனால் அதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

கொண்டாடிய ராகுல்:
குறிப்பாக 29வது ஓவரில் இணைந்த இவர்கள் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி இந்தியா 410 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றினர். அதில் முதல் ஆளாக சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 128* (94) ரன்கள் விளாசினார். ஆனால் அவருக்குப் பின் வந்து அவரை விட அதிரடியாக விளையாடிய ராகுல் டெத் ஓவரில் 50 ரன்கள் கடந்து 50வது ஓவரில் சதத்தை அடித்தார்.

அந்த வகையில் அதிரடியாக விளையாடிய அவர் மொத்தம் 11 பவுண்டரி 4 சிக்ஸருடன் 102 (64) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் சிறப்பான சதத்தை அவர் தவற விட்டதை மறக்க முடியாது. ஆனால் இந்த போட்டியில் தம்முடைய சொந்த ஊரான பெங்களூருவில் தீபாவளி தினத்தன்று அதிரடியாக விளையாடி அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தவறவிட்ட சதத்தை அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து கொண்டாடினார்.

- Advertisement -

சொல்லப்போனால் 62 பந்துகளிலேயே 100 ரன்கள் தொட்ட அவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையும் படைத்தார். இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 32 நாட்களுக்கு முன்பாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 410 ரன்ஸ்.. ஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி சதம்.. வரலாற்றில் நிகழாத அரிதான உலக சாதனை படைத்த இந்தியா

இது மட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் 24 வருடங்கள் கழித்து சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இவருக்கு முன் கடைசியாக கடந்த 1999 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக ஜாம்பவான் மற்றும் தற்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சதமடித்ததை ரசிகர்களால் மறந்திருக்க முடியாது.

Advertisement