ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பெங்களூருவில் நடைபெற்ற 45வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே வெளியேறிய நெதர்லாந்து ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கிய நிலையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாடியது.
அந்த சூழ்நிலையில் மதியம் 2 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்
அரிதான சாதனை:
அதில் கில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 (32) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 61 (54) ரன்கள் குவித்து அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51 (56) ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சிரியாஸ் ஐயர் அரை சதம் கடந்த நிலையில் அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் தம்முடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியும் நெதர்லாந்து பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அசத்திய போது ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து 10 பவுண்டரி 5 சிக்ஸருடன் 128* (94) ரன்கள் விளாசினார். அவரை பார்த்த ராகுல் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடி 11 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 102 (64) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அதனால் 50 ஓவரில் இந்தியா 410/4 ரன்கள் குவித்த நிலையில் நெதர்லாந்து அதிகபட்சமாக பஸ் டீ லீடி 2 விக்கெட்கள் எடுத்தார். அந்த வகையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, கேஎல் ராகுல் 102 என இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளனர். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதையும் படிங்க: 410 ரன்ஸ்.. ஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி சதம்.. வரலாற்றில் நிகழாத அரிதான உலக சாதனை படைத்த இந்தியா
கடந்த 1975 முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வரலாற்றில் இது போல் எந்த அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் ஒரே போட்டியில் 50+ ரன்கள் அடித்ததில்லை. ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மட்டுமே இந்தியாவுக்கு எதிராக 2013, 2020 ஆகிய வருடங்களில் முறையே ஜெய்ப்பூர், சிட்னி நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 2 முறை இந்த வினோத சாதனையை படைத்துள்ளது. அதை விட ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு போட்டியில் 3 வீரர்கள் (ரோஹித், கில், விராட்) அரை சதமும் 2 வீரர்கள் (ராகுல், ஸ்ரேயாஸ்) சதமும் அடித்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையும் இந்தியா படைத்துள்ளது.