
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் டெஸ்ட் அணியின் புதிய துவக்க வீரராக கே.எல் ராகுல் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் என இரண்டு தொடர்களிலுமே அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தார்.
இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் துவக்க வீரராகவும் கே.எல் ராகுல் மாறியுள்ளார். தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரராகவே கே.எல் ராகுலே திகழ்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தற்போது கௌஹாத்தி சென்றடைந்து தீவிர வலைப்பயிற்சியினையும் அவர் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் வலைப்பயிற்சியில் கூட தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள விரும்பமாட்டேன் என்று தனது வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் அவர் அந்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவை வலைப் பயிற்சியில் கூட சந்திக்க விரும்ப மாட்டேன். ஏனெனில் அவர் வலைப்பயிற்சியின் போது பந்து வீசுகையிலும் கூட சர்வதேச போட்டிகளில் எவ்வாறு வீசுகிறாரோ அதேபோன்றே பந்து வீசுவார். நான் எப்போதுமே அவரது பந்துவீச்சை எதிர்கொள்ளும் போதும் என்னுடைய தலையையோ அல்லது காலையோ உடைத்து விடுவாரோ என்று பயப்படுவேன்.
அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சில் முழு ஈடுபாடும் இருக்கும். வலைப்பயிற்சியில் ஒரு சில வீரர்கள் மட்டுமே அவரை அடித்து விளையாடுவார்கள். அவரை வலைப்பயிற்சியின் போது சந்திப்பது என்பது எளிதானது கிடையாது. எனவே நான் சந்தித்த பவுலர்களிலேயே கடினமான பவுலர் என்றால் அவரை மட்டுமே குறிப்பிடுவேன். இந்திய அணி பயிற்சிகளில் அவ்வப்போது பும்ராவின் பந்துவீச்சை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள நேரிடும்.
இதையும் படிங்க : கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் மூலம் மோசமான சாதனைக்கு ஆளான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
ஆனாலும் அப்போது கூட நான் அவரை சந்திக்க விரும்ப மாட்டேன். வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை அவரின் பந்துவீச்சை ஆரம்பத்திலேயே கணித்து விளையாடுவது என்பது மிகவும் கடினம். அவருக்கு எதிராக நீங்கள் ஒரு பந்தில் ரன் குவித்தால் அடுத்த பந்தினை மிகவும் கடினமாக வீசுவார். அதன் காரணமாகவே அவரது ஓவரில் பலரும் ரன் குவிக்க கஷ்டப்படுகிறார்கள் என்று கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.