உயிருக்கு போராடிய சிறுவனின் ஆப்ரேஷனுக்காக 31 லட்சம் கொடுத்து காப்பாற்றிய இந்திய வீரர் – குவியும் வாழ்த்து

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வந்த டி20 தொடரில் அடுத்தடுத்த 3 வெற்றிகளால் 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்தது. இதன் வாயிலாக கடந்த 2016க்கு பின் 6 ஆண்டுகள் கழித்து சர்வதேச டி20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

indvswi

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் துணை கேப்டனாக இருந்த நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகினார். இதே காரணத்தால் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரை காப்பாற்றிய ராகுல்:
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஒரு இளம் சிறுவனுக்கு மிகவும் அவசர மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ள கேஎல் ராகுல் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். மும்பையைச் சேர்ந்த “வரத்” எனும் 11 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாகவே எலும்பு மஞ்சை மாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் போராடி வந்தார். அந்த அறுவை சிகிச்சையை செய்வதற்காக 35 லட்சங்கள் தேவைப்பட்ட காரணத்தால் அவரின் ஏழ்மை நிறைந்த குடும்பத்தினரால் திடீரென்று அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாமல் தவித்து வந்தார்கள்.

rahul 2

அவரின் தந்தை சச்சின் நல்வாடே இன்சூரன்ஸ் ஏஜென்டாக பணிபுரிய அவரின் தாய் ஸ்வப்னஜா இல்லத்தரசியாக இருந்து வந்தார். அந்த வேளையில் தங்கள் மகனுக்கு இந்த முக்கியமான அறுவை சிகிச்சை செய்வதற்காக வேறு வழியில்லாமல் தவித்த அவர்கள் இறுதியில் கிவ்இந்தியா எனும் நிறுவனம் வாயிலாக அறுவை சிகிச்சைக்கு தேவையான 35 லட்சம் நிதியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். கடந்த சில மாதங்களாக இந்த முயற்சியில் மும்முரமாக ஈடுபட்ட போதிலும் சுமார் 3 லட்சங்களை மட்டுமே திரட்ட முடிந்ததால் “தங்களின் மகனை காப்பாற்ற முடியுமா” என்ற வேதனையில் அவர்கள் இருந்தார்கள்.

- Advertisement -

31 லட்சம் உதவி:
அதுவரை மும்பையிலுள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5ம் வகுப்பு படிக்கும் தங்களது மகனுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். உயிருடன் போராடிக் கொண்டிருந்த அந்த பையனுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம் என்பதால் சமீபத்தில் வந்த அவரின் 11 ஆவது பிறந்த நாளில் மிகவும் புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த அவரின் தந்தை மனதுக்குள் கவலையை வைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் தனது மகனை உற்சாகப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

rahul 2

அந்த தருணத்தில் இதைப் பற்றி அறிந்த கே எல் ராகுல் குழுவினர் உடனே அந்த விஷயத்தை ராகுல் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அதைப் பற்றி தெரிந்த கேஎல் ராகுல் உடனே எந்தவித யோசனையும் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு தேவையான எஞ்சிய 31 லட்சத்தை எந்தவித தயக்கமும் இல்லாமல் கொடுத்தார். இதனால் உடனடியாக வரத் எனும் அந்தப் பையனுக்கு எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நடந்து முடிந்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த சிறுவன் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்ற செய்தி பலரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

- Advertisement -

இதயத்தை தொட்ட ராகுல்:
இது பற்றி ராகுல் தெரிவித்தது பின்வருமாறு : ” வரத் நிலை பற்றி நான் அறிந்ததும் எனது குழு கிவ்இந்தியா நிறுவனத்தை தொடர்பு கொண்டது. அதனால் நாங்கள் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ முடிந்தது. தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நன்றாக இருக்கிறார்.வரத் விரைவில் தனது லட்சியத்தை நோக்கிய பயணத்துக்கு திரும்பி அவரது கனவுகளை அடைவார் என்று நம்புகிறேன். எனது பங்களிப்பு மேலும் மேலும் மக்கள் முன்வருவதற்கும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்” என பெரிய மனதுடன் கூறியுள்ளார்.

KL Rahul

ராகுல் செய்த இந்த வாழ்நாள் உதவி பற்றி அந்த பையனின் தாய் ஸ்வப்னா கூறியது பின்வருமாறு. “வரத் அறுவை சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகையை வழங்கிய கே.எல்.ராகுலுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவர் இல்லை என்றால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை இவ்வளவு குறுகிய காலத்தில் மேற்கொள்ள இயலாது. நன்றி ராகுல்” என நன்றி உணர்வுடன் கூறினார்.

இதையும் படிங்க : மிரட்டல் விடுத்த பத்திரிகையாளரின் பெயரை வெளியில் சொல்லாமல் இருக்க இதுதான் காரணம் – சாஹா விளக்கம்

இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள ராகுல் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்றியது பல இந்திய ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளது. இதனால் பலரின் பாராட்டை பெற்றுள்ள ராகுல் வரும் ஐபிஎல் தொடரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக 17 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கேப்டனாக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement