
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் தடுமாற்றமாக இருக்கிறது. குறிப்பாக அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ந்து அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த வருகிறார்கள். ஆனால் கேஎல் ராகுல் அவர்களை விட அபாரமாக விளையாடி வருகிறார்.
முதல் போட்டியிலேயே 77 ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றிய அவர் இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் எடுத்தார். 3வது போட்டியில் மீண்டும் அபாரமாக விளையாடிய ராகுல் 84 ரன்கள் குவித்து குறைந்தபட்சம் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார். இத்தனைக்கும் சமீபத்தில் சுமாரான ஃபார்மில் இருந்த அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.
ஆனால் சவாலான ஆஸ்திரேலியாவில் தம்முடைய திறமையால் அசத்தும் ராகுல் மீண்டும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அசத்துவது பற்றி ராகுல் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொருவரும் தங்களது சொந்த திட்டத்தை வகுப்பார்கள். டாப் ஆர்டரில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது”
“அது உங்கள் வழியில் செல்லும் போது முதல் 10 – 15 ஓவர்களை தாண்டி விட்டால் பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள வேகத்துக்கு குக்கபரா பந்துகளில் மகிழ்ச்சியுடன் விளையாடலாம் என்ற தன்னம்பிக்கை உங்களுக்கு கிடைக்கும். இந்த பெரிய தொடரில் அனைவருமே சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். எனவே இது நீங்கள் முதல் 20 – 30 பந்துகளை சமாளித்து விளையாடுவதை பற்றியதாகும்”
“முதல் 30 ஓவர்கள் வரை உங்களுடைய தடுப்பாட்டத்தை இறுக்கமாக வேண்டும். 30 ஓவர்கள் என்பது பவுலர்களின் நேரம். எனவே அவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்து பந்துகளை தவறவிட வேண்டும். ஆரம்பத்தில் முடிந்தளவுக்கு நீங்கள் கட்டுப்பாட்டுடன் விளையாடினால் பந்து பழையதாகும் போது உங்களால் அசத்த முடியும். இது தான் என்னுடைய எளிமையான திட்டமாகும். இதையே பெரும்பாலானவர்கள் பின்பற்றுவார்கள் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: விராட் கோலி கொடுத்த கிஃப்டால் பாலோ ஆனில் இருந்து தப்பிய இந்திய அணி – சுவாரசிய பின்னணி இதோ
“கடந்த போட்டியில் லபுஸ்ஷேன் – மெக்ஸ்வீனி ஆகியோர் முதல் 10 – 20 ஓவர்கள் நல்ல லென்த் பந்துகளை நன்றாக அடிக்காமல் விட்டார்கள். அதுதான் ஆஸ்திரேலியாவில் செய்ய வேண்டிய நல்ல விஷயமாகும். இங்குள்ள வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை நம்பி நீங்கள் அடிக்காமல் விடலாம். அதை எதிரணியினர் கடந்த போட்டியில் எனக்கு காண்பித்தார்கள். எப்போதுமே வெளிநாடுகளில் தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நீங்கள் 20 – 30 ஓவர்கள் மதிப்பு கொடுத்து விளையாட வேண்டும். பந்து ஸ்விங் ஆகும் நேரங்களில் மரியாதை கொடுத்து விளையாடினால் நீங்கள் ரன்கள் குவிப்பதற்கான நேரம் தாமாக வரும்” என்று கூறினார்.