
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக போட்டியின் பாதியிலிருந்து விலகினார். இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
அதேபோன்று தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறி இந்திய அணியுடன் சுப்மன் கில் பயணித்து வந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் ஓய்வில் இருக்க உள்ளார். இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவற விட இருக்கும் அவர் ஒருநாள் தொடரையும் தவறவிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆஸ்திரேலியா தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை இந்திய அணியில் இணையாமல் இருந்து வருகிறார். எனவே அவரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது.
இப்படி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் மற்றும் துணை கேப்டன் என இருவருமே காயம் அடைந்துள்ளதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் பார்க்கையில் : ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கேப்டன் பதவியை இழந்துள்ளதால் அவர்கள் மீண்டும் கேப்டன் பதவியினை ஏற்க வாய்ப்பில்லை.
அதன் காரணமாக இந்திய அணியின் அனுபவ வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் கேப்டன்சி அனுபவம் உடைய அவர் தொடர்ச்சியாக ஒருநாள் அணியுடன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயணித்து வரும் வேளையில் அவருக்கு இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கேப்டன் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : அந்த பயமே எனக்கு கிடையாது.. தன்னுடைய டி20 கேப்டன் பதவி கில்லுக்கு செல்வது குறித்து – சூரியகுமார் யாதவ் பேச்சு
மேலும் சுப்மன் கில் இந்த ஒருநாள் தொடரை தவறவிட்டால் அவருக்கு பதிலாக துவக்க வீரராக இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவார் என்றும் நான்காவது வீரருக்கான இடத்தில் திலக் வர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் போட்டிக்கு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.