IPL 2023 : காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய வீரர் – டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் சந்தேகம், ரசிகர்கள் கவலை

IND
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 தொடரில் பரபரப்பாக நடைபெற்று வரும் போட்டிகளுக்கு மத்தியில் சில முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறி வருவது அந்தந்த அணிகளுக்கு பின்னடைவாக அமைந்து வருகிறது. அந்த வகையில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நட்சத்திர இந்திய வீரர் கேஎல் ராகுல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தசை பிடிப்பு காயத்தை சந்தித்தார். அதனால் பாதியிலேயே வெளியேறிய அவர் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்வதற்காக களமிங்கியது ஓரளவு நல்ல செய்தியாக பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னைக்கு எதிரான போட்டியில் க்ருனால் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட நிலையில் கேஎல் ராகுல் பற்றிய காயத்தின் அறிவிப்புகள் வெளிவராமலேயே இருப்பது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்தது. ஏனெனில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் சந்தேகம்:
குறிப்பாக காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் சுமாராக விக்கெட் கீப்பிங் செய்து பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத கேஎஸ் பரத்துக்கு பதில் அவர் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன. ஏனெனில் இங்கிலாந்தில் ஏற்கனவே 2018இல் தொடக்க வீரராக சதமடித்து 149 ரன்கள் குவித்த அவர் 2021 சுற்றுப்பயணத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அப்படி ஸ்விங் வேகப்பந்துக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் வெற்றிகரமாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள காரணத்தால் அவர் விளையாடுவது இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடரிலிருந்து கேஎல் ராகுல் காயத்தால் விலகுவதாக பிரபல க்ரிக்பஸ் நிலையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மேலும் அவரது காயம் பற்றிய சோதனைகளின் இறுதி முடிவுகள் வரும் போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கும் அந்த செய்தி எப்படியிருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர் விளையாடுவது 99% சந்தேகம் என கூறியுள்ளது. இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “கேஎல் ராகுல் தசை பிடிப்பு காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அவரது காயம் பற்றிய சோதனை முடிவுகள் தான் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவாரா என்பதை தீர்மானிக்கும்”

“தற்போதைய நிலைமையில் அவருடைய காயத்தை ஆராய்ந்து வரும் எம்சிஏ அதைப்பற்றி இந்திய அணி நிர்வாகத்திடம் கூட முழுமையாக தெரிவிக்கவில்லை. எப்படி இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ராகுல் பெரும்பாலும் விளையாட மாட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் விலகிய நிலையில் மற்றொரு முக்கிய வீரரான ராகுலும் விளையாடுவது 99% சந்தேகமாகியுள்ளது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு பலத்த பின்னடைவை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குறிப்பாக என்ன தான் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்டு அனுபவத்தை கொண்டுள்ள அவர் விளையாட மாட்டார் என்பது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை கொடுக்கிறது. இருப்பினும் இந்த செய்தியை பார்க்கும் சில ரசிகர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃபார்மின்றி திண்டாடி வரும் ராகுல் காயத்தால் விலகியது இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தாது என்ற நிதர்சனத்தை சமூக வலைதளங்களில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:IPL 2023 : வரலாற்றில் தோனியையே பயமுறுத்தி மிரட்டிய பெருமை அவரை மட்டுமே சேரும் – இர்பான் பதான் அதிரடி பேட்டி

ஏனெனில் கடந்த டிசம்பரில் வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் திணறிய அவர் நிச்சயமாக சவாலான இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு அசத்த மாட்டார் என்று ரசிகர்கள் உறுதியாகச் சொல்கின்றனர். இதனால் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement