ரொம்ப ஆட்டம் காட்டிட்டாரு.. அடுத்த டைம் வெல்லலாகே சிக்குனா அதை செஞ்சு விட்ருவோம் – பாராட்டுடன் எச்சரித்த கேஎல் ராகுல்

Dunith Wellalage 6
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 49.1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 58 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக துணித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதை தொடர்ந்து 214 ரன்களை துரத்திய இலங்கை ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 41.3 ஓவரில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பேட்டிங்கிலும் அசத்திய வெல்லாலகே 42* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.

- Advertisement -

ராகுல் பாராட்டுடன் எச்சரிக்கை:
இந்த வெற்றியால் ஆசிய கோப்பையின் ஃபைனலுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட இந்தியாவின் டாப் 5 உலகத்தரமான பேட்ஸ்மேன்களை தன்னுடைய மாயாஜால சுழலால் திணறடித்த 20 வயது இளம் ஸ்பின்னர் வெல்லாலகே இளம் வயதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த இலங்கை வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த வெல்லாலகேவை அடுத்த முறை சந்திக்கும் போது அதிரடியாக எதிர்கொள்வோம் என்று கேஎல் ராகுல் பாராட்டுடன் எச்சரிக்கையும் கொடுத்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “தம்முடைய அணிக்காக சிறந்த வேலை செய்த அவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அனைவரும் கவனத்தை எடுத்துள்ளார்”

- Advertisement -

“மேலும் களத்தில் நான் விளையாடிய வரை இலங்கை பந்து வீச்சு அட்டாக்கில் அவர் மிகவும் அபாயகரமான பவுலராக இருந்தார். இதைத் தவிர்த்து வேறு நான் என்ன சொல்ல முடியும்? ஏனெனில் அவர் எங்களின் டாப் 5 பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியுள்ளார். மேலும் பேட்டிங்கிலும் அசத்திய அவருக்கு இன்றைய நாள் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் அடுத்த முறை நாங்கள் விளையாடும் போது அவரை அதிரடியாக எதிர்கொண்டு விளையாடுவோம்”

இதையும் படிங்க: அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அமர்க்களம் செய்த குல்தீப் யாதவ் – அப்துர் ராசாக்கின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

“ஆரம்ப கட்டத்தில் சில பந்துகளை எதிர்கொண்ட பின் எந்த வகையான ஷாட்டை அடிக்கலாம் என்று நான் யோசித்தேன். அதே சமயம் எந்த பவுலருக்கு எதிராக எந்த ஷாட்டை அடிக்கலாம் என்பதிலும் கவனத்துடன் இருந்தேன். எனவே அடுத்த முறை விளையாடுவது இன்னும் நாங்கள் சற்று வித்தியாசமாக விளையாட முயற்சிப்போம்” என்று கூறினார். இந்த நிலையில் பாகிஸ்தானை அடுத்த போட்டியில் இலங்கை தோற்கடிக்கும் பட்சத்தில் ஃபைனலில் வெல்லாலகேவை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement