சென்சூரியன் மைதானத்தை கோட்டையாக்கிய ராகுல்.. வேறு எந்த வெளிநாட்டு வீரரும் செய்யாத தனித்துவ சாதனை

Kl Rahul Centurion
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

அந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய முதல் இன்னிங்ஸில் கடுமையாக போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

சென்சூரியன் கோட்டை:
இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17, கில் 2 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயரும் 31 ரன்களில் போராடி அவுட்டானார்கள். அதனால் 107/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆடரில் நிதானமாக விளையாடிய ராகுல் தென்னாபிரிக்காவுக்கு சவாலாக மாறினார்.

அந்த வகையில் முதல் நாளிலேயே அரை சதம் கடந்து 70 ரன்கள் குவித்த அவர் 2வது நாளில் தொடர்ந்து கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 101 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றி ஆட்டமிழந்தார். அதன் வாயிலாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

அதை விட கடைசியாக இதே மைதானத்தில் கடந்த 2021இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் குவித்த அவர் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அந்த வரிசையில் தற்போது இப்போட்டியிலும் சதமடித்துள்ள அவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 5/3 இந்தியாவுக்கு செஞ்சதை அனுபவித்த நியூஸிலாந்து.. வங்கதேசம் மாபெரும் வரலாற்று சாதனை வெற்றி

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அனைவரும் சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்சமாக தலா 1 டெஸ்ட் சதம் மட்டுமே அடித்துள்ளனர். தற்போது கேஎல் ராகுல் மட்டுமே 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரராக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுக்கு சவாலான சென்சூரியன் மைதானத்தை ராகுல் தம்முடைய கோட்டையாக்கியுள்ளார் என்றே சொல்லலாம். இதை தொடர்ந்து கடந்த போட்டியை போலவே அவர் சதமடித்த இப்போட்டியிலும் இந்தியா வெல்வதற்கு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement