- Advertisement -
ஐ.பி.எல்

நடப்பு சாம்பியனை வீட்டுக்கு அனுப்பிய மழை.. சிஎஸ்கே, மும்பையின் சாதனையை தவற விட்ட கொல்கத்தா

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 58 போட்டிகளுடன் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் மே 17ஆம் தேதி மீண்டும் துவங்கியது. பெங்களூருவில் மீண்டும் நடைபெற்ற 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

இருப்பினும் மாலை 7 மணி முதலே பெங்களூரு மைதானத்தில் பலத்த மழை பெய்ததால் அந்தப் போட்டி தூங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல விட்டு விட்டு பெய்த மழை டாஸ் வீச விடாமல் தொடர்ந்து பெய்தது. இறுதியில் தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்துவதற்காக நடுவர்கள் இரவு 10.23 மணி வரை காத்திருந்தார்கள்.

- Advertisement -

நாக் அவுட் செய்த மழை:

அப்போதும் மழை ஓயாத காரணத்தால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நடுவர்கள் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியைப் பகிர்ந்து கொண்டனர். அதையும் சேர்த்து 12 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்ற பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதனால் பெங்களூரு அணி இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும்.

மறுபுறம் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 போட்டிகளில் 12 புள்ளிகளை மட்டுமே பெற்றது. அதனால் எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. எனவே சிஎஸ்கே, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளை தொடர்ந்து இந்த வருடம் கொல்கத்தா 4வது அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

சென்னை, மும்பை மட்டுமே:

இதன் காரணமாக இந்த வருடம் கோப்பையை வென்று நடப்புச் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் கொல்கத்தா கோட்டை விட்டுள்ளது. வரலாற்றில் சென்னை 2010, 2011 ஆகிய வருடங்களில் அடுத்தடுத்த கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் அணியாக சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து மும்பை அணி அந்த சாதனையை (2019, 2020) படைத்தது.

இதையும் படிங்க: உங்களுக்கு தான் விராட் கோலி.. எனக்கு அவன் 16 வயசு சீக்கு.. உயிர் நட்பு பற்றி இஷாந்த் சர்மா நெகிழ்ச்சி

தற்போது அது போன்ற பொன்னான சாதனையைப் படைக்கும் வாய்ப்பைக் கோட்டை விட்டுள்ள கொல்கத்தா அணியை ஆறுதல் வெற்றியைக் கூட பெற விடாத மழை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இது ஒரு புறமிருக்க இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு இப்போட்டியில் பெங்களூரு ரசிகர்கள் விராட் கோலியின் டெஸ்ட் ஜெர்சியை அணிந்து மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -