ஐபிஎல் 2022 மெகா ஏலம் : கவனக்குறைவால் மும்பைக்கு பதில் டெல்லிக்கு ஏலம் போன வீரர் – ரசிகர்கள் அதிர்ச்சி

Charu-Sharma
- Advertisement -

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் நடைபெற்ற இந்த ஏலத்தின் இறுதியில் அனைத்து 10 அணிகளுக்கும் தேவையான 204 வீரர்கள் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளார்கள். வழக்கம் போலவே இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திலும் ஒரு சில வீரர்களை வாங்குவதற்கு ஒரு சில அணிகளிடையே பலத்த போட்டி நிலவியது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன வீரராக சாதனை படைத்தார். அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் 11.50 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.

- Advertisement -

பரபரப்பான ஏலம்:
முன்னதாக 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தின் முதல் நாளில் ஏலத்தை தொகுத்து நடத்திக்கொண்டிருந்த இங்கிலாந்தின் “ஹக் எட்மேட்ஸ்” திடீரென மயங்கி விழுந்ததால் ஏலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் ஏலத்தை தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஏலத்தை தொடர்ந்து நடத்துவதற்காக ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற இந்தியாவின் மூத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் “சாரு சர்மா” அழைக்கப்பட்டார். சற்றும் எதிர்பாராத அந்த திடீர் அழைப்பை ஏற்றுக்கொண்ட அவரும் இறுதிவரை மிகச்சிறப்பாக ஏலத்தை நடத்தி முடித்துள்ளார்.

ஆனால் அவரின் ஒரு சிறிய கவனக்குறைவு காரணமாக ஒரு இந்திய வீரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏலம் நடந்து கொண்டிருக்கும் போது நிகழ்ந்த பரபரப்பு காரணமாக அந்த நேரத்தில் இந்த நிகழ்வு பெரிய அளவில் கண்டு கொள்ளப்படவில்லை. இருப்பினும் அதை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்கள் அந்த தவறை தற்போது சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

- Advertisement -

தவறுதலாக கலீல் அஹமத்:
அதாவது ஐபிஎல் 2022 ஏலத்தின் 2வது நாளில் இந்திய வீரர் கலீல் அஹமத் பெயரை அவரின் அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு ஏலதாரர் சாரு சர்மா அறிவித்தார். இதையடுத்து அவரை வாங்குவதற்காக நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவரை வாங்க ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்ததால் அவரின் விலை 4 கோடிகளை தாண்டியது.

அந்த வேளையில் விடாது அடம்பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அவரை 5 கோடிக்கு கேட்டது. ஆனாலும் அசராத மும்பை மீண்டும் 5.25 கோடிக்கு கேட்டது. இந்த தருணத்தில் தான் மிகப்பெரிய குழப்பம் மற்றும் கவன குறைவு ஏற்பட்டது. ஆம் அந்த நேரத்தில் டெல்லி அணியின் உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி 5.5 கோடிக்கு மீண்டும் ஏலம் கேட்டுவிட்டு உடனடியாக கையை கீழே இறக்கி விட்டார்.

- Advertisement -

கவனக்குறைவால் தவறு:
அதை உன்னிப்பாக கவனிக்க தவறிய ஏலாதாரர் சாரு சர்மா 5.5 கோடிக்கு கலீல் அஹமதை யார் வாங்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் ஏற்கனவே அவரை மும்பை 5.25 கோடிக்கு வெற்றிகரமாக ஏலம் கேட்டதை அவர் நொடிப்பொழுதில் மறந்துவிட்டு அதற்கு பதில் அவரை டெல்லி 5.25 கோடிக்கு கடைசியாக வெற்றிகரமாக ஏலம் கேட்டதாக நினைத்துக் கொண்டு 5.50 கோடிக்கு கலீல் அஹமதை வாங்க விரும்புகிறீர்களா என்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மும்பை சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் 32 முறை நிகழ்ந்த போட்டிக்கு பின் கலீல் அஹமதை 5.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு விளையாட சாரு சர்மா ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் உண்மையாகவே 5.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஏலம் கேட்டிருந்தது. இருப்பினும் அதை கவனிக்காத சாரு சர்மா ஒரு நொடிப்பொழுதில் ஒரு தவறான முடிவு எடுத்ததால் மும்பை அணியில் விளையாட வேண்டிய கலீல் அகமது தற்போது டெல்லி அணியில் விளையாட உள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிர்ச்சி:
அந்த தருணத்தில் பரபரப்பாக நடந்த ஏலத்தில் கலீல் அஹமதை வாங்க மும்பை மற்றும் டெல்லி ஆகிய 2 அணிகளுமே ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவசர அவசரமாக ஏலம் கேட்டதே இப்படி ஒரு தவறு நடப்பதற்கு மிக முக்கிய காரணமாகும். அத்துடன் இதற்கு முன் ஐபிஎல் ஏலம் போன்ற மிகப்பெரிய பணம் கொழிக்கும் ஏலத்தை நடத்திய அனுபவம் இல்லாத சாரு சர்மா அந்த ஒரு முக்கியமான தருணத்தை உன்னிப்பாக கவனிக்கத் தவறியதும் இந்த தவறுக்கான ஒரு காரணமாகும்.

khaleel 2

இதற்காக யாரையும் குறைகூற முடியாது என்பதே நிதர்சனம். ஏனெனில் இப்படி ஒரு தவறு வேண்டுமென்றே நிகழ வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். இருந்தாலும் ஐபிஎல் போன்ற ஒரு த்ரில் நிறைந்த டி20 தொடரில் வெற்றி என்பது வெறும் ஒரு பந்தில் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் மாறிவிடும் என்பதை ரசிகர்கள் பலமுறை களத்தில் பார்த்துள்ளார்கள். அந்த வகையில் களத்திற்கு வெளியே நடக்கும் இது போன்ற ஏலத்தில் இது போன்ற தவறுகள் நடப்பது ஒரு அணியின் தலைவிதியையே மாற்றக் கூடியது என்பதும் உண்மையாகும்.

இதையும் படிங்க : நீ 100% நல்லா ஆடுன. ஆனா இது உனக்கான நாள் இல்ல – இளம்வீரரை முதுகில் தட்டி கொடுத்து பாராட்டிய தோனி

ஏனெனில் இந்த ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்கள் தானே நாளை களத்தில் இறங்கி வெற்றிக்காக விளையாடுவார்கள். மேலும் கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்து நடத்தப்படும் மிகப்பெரிய ஏலத்தில் இதுபோன்ற ஒரு தவறு நடக்கலாமா என்ற நியாயமான கேள்வியையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கிறார்கள்.

Advertisement