2 நாளில் மேட்ச் முடிஞ்சுரும் போலயே.. கணிப்பை பொய்யாக்கிய இந்தியா.. இங்கிலாந்தால் அவமானப்பட்ட பீட்டர்சன்.. கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் நங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அந்த வகையில் முடிந்தளவுக்கு போராடியும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 20, பென் டுக்கெட் 35, ஜோ ரூட் 29, ஜானி பேர்ஸ்டோ 37, பென் போக்ஸ் 4 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்து போராடினார்.

- Advertisement -

பொய்யான கணிப்பு:
மறுபுறம் முதல் நாளிலேயே இங்கிலாந்தை ஆல் அவுட் செய்யும் அளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா தலா 3, பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் தாங்கள் இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி தோற்கடிப்போம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் தொடர் துவங்குவதற்கு முன்பாக எச்சரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக 2022 டிசம்பரில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது போல் இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் போன்ற இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்திருந்தனர். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றதும் உடனடியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தங்களுடைய அணி 450 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்யும் என்று பதிவிட்டது பின்வருமாறு.

- Advertisement -

“இங்கிலாந்து பேட்டிங். இன்று 450/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வோமோ” என பதிவிட்டார். அதாவது முதல் நாளிலேயே இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி இங்கிலாந்து 400 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்யும் என்று அவர் கணித்தார். அதற்கேற்றார் போல் இங்கிலாந்தும் 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன் பின் சுதாரித்து சிறப்பாக பந்து வீசிய இந்தியா அடுத்த சில மணி நேரங்களில் இங்கிலாந்தை 246 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

இதையும் படிங்க: 246 ரன்ஸ்.. வாயில் எச்சரித்த இங்கிலாந்து ஒருநாள் கூட தாங்காத பரிதாபம்.. முதல் நாளிலேயே முடித்த இந்தியா

அதனால் அடுத்த 2 மணி நேரத்தில் தன்னுடைய கணிப்பு பொய்யானதால் பல்டி அடித்த கெவின் பீட்டர்சன் மீண்டும் ட்விட்டரில். “ப்ளடி ஹெல். இது 2 நாட்களில் முடியக்கூடிய போட்டியாக இருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார். அந்த வகையில் பஸ்பால் எனப்படும் அதிரடி அணுகுமுறையை நம்பி தைரியமான கணிப்பை வெளியிட்ட கெவின் பீட்டர்சன் கடைசியில் இங்கிலாந்து சொதப்பியதால் அவமானத்தை சந்தித்தார். அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் நீங்கள் சரமாரியாக அடித்து நொறுக்குவதற்கு இது ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது என்று பீட்டர்சனை தற்போது வகை வகையாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement