இந்தியாவில் இப்படியும் நடக்குமா? பாண்டியாவை அவமானப்படுத்திய அஹமதாபாத் ரசிகர்கள்.. பீட்டர்சன் வியப்பு

Kevin Pieterson
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 5வது லீக் போட்டியில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 45, கில் 32 ரன்கள் எடுத்த உதவியுடன் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த மும்பைக்கு ரோஹித் சர்மா 43, தேவாலட் ப்ரேவிஸ் 46 ரன்கள் எடுத்தும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவரில் 162/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

முன்னதாக அந்தப் போட்டியில் தன்னுடைய முன்னாள் அணியான குஜராத்துக்கு எதிராக மும்பையின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா டாஸ் வீசுவதற்காக வந்தார். அப்போது தொகுப்பாளர் ரவி சாஸ்திரி “மும்பை கேப்டன் பாண்டியா” என்று சொன்னதுமே அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அது போக பாண்டியா பவுலிங் வீசும் போதும் பவுண்டரி எல்லை அருகே ஃபீல்டிங் செய்த போதும் அகமதாபாத் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டு அவமானப்படுத்தினார்கள்.

- Advertisement -

பீட்டர்சன் வியப்பு:
அதனால் ஆச்சரியமடைந்த கெவின் பீட்டர்சன் நேரலையில் பேசியது பின்வருமாறு. “இங்கே பாண்டியா வரவேற்கப்படவில்லை. அனைவரும் கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் நீங்கள் இப்படி ஒரு இந்திய நட்சத்திர வீரருக்கு எதிராக கோஷங்களை அடிக்கடி கேட்க முடியாது. கடைசியாக ஒரு இந்திய நட்சத்திர வீரருக்கு எதிராக இங்கே ரசிகர்கள் கோஷமிட்டது எனக்கு நினைவில்லை”

“அவர் அற்புதமான கிரிக்கெட்டர். இருப்பினும் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டதை கேட்டது புதிதாக இருக்கிறது” என்று சொல்லி இந்தியாவில் இந்திய வீரருக்கு எதிராக இப்படியும் நடக்குமா? என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். முன்னதாக குஜராத்தில் பிறந்த பாண்டியா 2016இல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். அங்கே ரோகித் சர்மாவால் வளர்க்கப்பட்டு பின்னர் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அசத்திய அவர் சமீப காலங்களாகவே காயத்தை காரணமாக காட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடாமல் புறக்கணித்து வருகிறார்.

- Advertisement -

அந்த நிலையில் 2022 சீசனில் மும்பை அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவரை குஜராத் நிர்வாகம் 15 கோடிக்கு நம்பி வாங்கி கேப்டனாக நியமித்தது. அந்த வாய்ப்பில் பாண்டியாவும் முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கிடையே ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கும் அவர் இந்தியாவுக்காக காயத்தை சந்தித்து 100% போட்டிகளிலும் விளையாடுவதில்லை.

இதையும் படிங்க: வெறும் 6 ரன்ஸ்.. குஜராத்திடம் தோற்ற பாண்டியா மும்பை.. தொடர்ந்து 12வது வருடமாக நேர்ந்த சோகம்

அந்த சூழ்நிலையில் இந்த வருடம் திடீரென குஜராத் அணியிலிருந்து டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை ரோகித் சர்மாவை கழற்றி விட்டி தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதற்கு பாண்டியாவும் சம்மதம் தெரிவித்தது குஜராத் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்காமல் கடந்த வருடம் வரை தங்களுடைய கேப்டனாக இருந்த பாண்டியா தற்போது பணத்துக்காக மும்பையின் கேப்டனாக செயல்படுவதாலேயே அகமதாபாத் ரசிகர்கள் இப்படி கூச்சலிட்டு அவமானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement