வெறும் 6 ரன்ஸ்.. குஜராத்திடம் தோற்ற பாண்டியா மும்பை.. தொடர்ந்து 12வது வருடமாக நேர்ந்த சோகம்

GT vs MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு ஆரம்பத்திலேயே ரித்திமான் சஹா 19 (15) ரன்களில் பும்ரா வேகத்தில் க்ளீன் போல்ட்டானார்.

அப்போது வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடி செட்டிலான கேப்டன் சுப்மன் கில் 31 (22) ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஓமர்சாய் 17 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அதற்கடுத்ததாக வந்த டேவிட் மில்லரை 12 (11) ரன்களில் காலி செய்த பும்ரா மறுபுறம் போராடிய சாய் சுதர்சனையும் 45 (39) ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:
கடைசியில் ராகுல் திவாட்டியா 22, விஜய் சங்கர் 6*, ரஷித் கான் 4* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் குஜராத் 168/6 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3, ஜெரால்ட் கோட்சி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய மும்பைக்கு முதல் ஓவரிலேயே ஓமர்சாய் வேகத்தில் இசான் கிசான் டக் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார்.

அதே போல அடுத்ததாக வந்த இளம் வீரர் நமன் திர் 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 20 (10) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த தேவால்ட் பிரேவிஸுடன் ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் விளையாடிய ரோகித் சர்மா 3வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது தமிழக வீரர் சாய் சுதர்சன் சுழலில் 43 (29) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் செட்டிலான தேவால்ட் ப்ரேவிஸ் 46 (38) ரன்களில் மோகித் சர்மா வேகத்தில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது காப்பாற்றுவார்கள் என்று கருதப்பட்ட டிம் டேவிட் 11 (10) ரன்களிலும் திலக் வர்மா 25 (19) ரன்களிலும் அவுட்டானதால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது கேப்டன் பாண்டியா முதல் 2 பந்துகளில் 6, 4 அடித்த போதிலும் 3வது பந்தில் அவுட்டானார். அதனால் 20 ஓவரில் 162/9 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை 6 ரன்கள் வித்யாசத்தில் பரிதாபமாக தோற்றது.

குறிப்பாக கடைசி 5 ஓவரில் 7 விக்கெட்டுகள் கைவசம் இருந்த மும்பைக்கு வெறும் 43 ரன்கள் தேவைப்பட்ட போது டிம் டேவிட், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஃபினிஷிங் செய்ய தவறினர். அதனால் பாண்டியா தலைமையில் முதல் போட்டியிலேயே மும்பை தோற்றது.

இதையும் படிங்க: வெறும் 14 ரன்ஸ் 3 விக்கெட்ஸ்.. போராடிய சுதர்சன்.. மலிங்காவின் சாதனையை உடைத்து மாஸ் கம்பேக் கொடுத்த பும்ரா

அத்துடன் 2012க்குப்பின் தொடர்ந்து 12வது வருடமாக ஐபிஎல் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் மும்பை 12வது தொடர்ச்சியான தோல்வியை பதிவு செய்தது. மறுபுறம் சுப்மன் கில் தலைமையில் முதல் போட்டியிலேயே வெறும் 168 ரன்களை கட்டுப்படுத்தி வெற்றி கண்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஸ்பென்சர் ஜான்சன், ஓமர்சாய், உமேஷ் யாதவ், மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்

Advertisement