
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்தும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் திண்டாடி வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்த இந்தியா இந்த வருடம் தென்னாப்பிரிக்காவிடம் 25 வருடங்கள் கழித்து தோற்றது.
அதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச் வேண்டும் என்ற கௌதம் கம்பீரும் அணுகுமுறையும் தவறான தேர்வுகளும் அடிக்கடி செய்யும் மாற்றங்களும் காரணமானது. அதனால் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று ஜாம்பவான் கபில் தேவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு கௌதம் கம்பீரை பயிற்சியாளராக இருப்பதை விட இந்திய அணியின் மேனேஜராக இருப்பதே வெற்றிகளுக்கு வித்திடும் என்று கபில் தேவ் பதில் கொடுத்தார். அதற்கான காரணம் பற்றி அவர் விரிவாக பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளர் என்பவரிடம் நான் பள்ளி மற்றும் கல்லூரியில் கற்றுக் கொண்டேன். அவர்கள் தான் அங்கே பயிற்சியாளராக இருப்பார். அவர்கள் என்னை நிர்வகிப்பார்கள்”
“ஒரு பயிற்சியாளர் எப்படி ஒரு லெக் ஸ்பின்னர் அல்லது விக்கெட் கீப்பருக்கு பயிற்சி கொடுக்க முடியும். நீங்கள் ஒரு வீரரை நிர்வகிக்க வேண்டும். அதுவே முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு மேனேஜராக நீங்கள் உங்களது வீரர்களுக்கு கச்சிதமான சூழ்நிலையைக் கொடுக்க முடியும். நீங்கள் மேனேஜராக இருக்கும் போது இளம் வீரர்கள் உங்களைப் பார்ப்பார்கள்”
“எப்படி என்னுடைய மேனேஜர் அல்லது கேப்டன் எனக்கு கச்சிதமான சூழ்நிலையைக் கொடுக்க முடியும் என்று வீரர்கள் சிந்திப்பார்கள். அணியில் இருக்கும் வீரர்களுக்கு கச்சிதமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதே ஒரு மேனேஜர் அல்லது கேப்டனின் வேலையாகும். அந்த வேலையை நீங்கள் அப்படித்தான் பார்க்க வேண்டும். நீங்கள் நன்றாக விளையாடாத வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 5வது டி20 நடக்கும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“சதமடிக்காத ஒருவருடன் நான் உணவு அருந்த மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது. ஆனால் இங்கே அப்படி நிறைய மக்கள் உள்ளனர். ஒரு கேப்டனாக நான் நன்றாக விளையாடாத வீரர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடுவேன். அந்த வகையில் நீங்கள் வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு கேப்டனாக உங்களுடைய ஆட்டம் மட்டும் முக்கியமல்ல. நீங்கள் அணியை ஒன்றிணைப்பதும் முக்கியம்” என்று கூறினார்.